பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் 39-வது பிறந்தநாளை, அக்கட்சியினர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில்… நேற்றைய தினம் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருமண ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்தார். 

திருமணங்களை நடத்தி வைத்த அண்ணாமலை

இந்த திருமண ஏற்பாடுகளை, தனியார் பள்ளி அறக்கட்டளையின் நிர்வாகி ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார். இவர் பாஜக-வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மிகவும் இணக்கமான இவரது தந்தை முரளி, அதிமுக-வில் விழுப்புரம் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். தந்தையும், மகனும் வெவ்வேறு கட்சிகளில் இருந்த போதிலும்… தனது மகனுடன் இணைந்து பாஜக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த முரளி, அண்ணாமலையுடன் நெருக்கமாக மேடையிலும் உலா வந்தார். அதிமுக-வில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் நிர்வாகி, பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்றது அதிமுக கட்சி வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியது. 

திருமண நிகழ்ச்சியில், அண்ணாமலையுடன் அதிமுக நிர்வாகி குடும்பத்தினர்

இந்த நிலையில், அதிமுக கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டதாக தெரிவித்து, முரளியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

from Tamilnadu News https://ift.tt/1HdZ4On