திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தின் நுழைவு வாயில் பகுதியில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தின் அனுமதியுடன், சுமார் 4 ஆயிரம் சதுர அடியில் 7 அடி உயரம் கொண்ட எம்.ஜி.ஆர் சிலையை, அ.தி.மு.க., பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சிலை திறப்பு விழா நிகழ்ச்சி

சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே பணியாற்றி மறைந்தவர்கள் நம்முடைய தலைவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். ஆனால், கருணாநிதியோ தன்னுடைய குடும்பத்துக்காகவும், தனக்குப் பிறகு தன்னுடைய குடும்ப வாரிசுகள் தான் வர வேண்டும் என்பதற்காகவும் கட்சி நடத்தினார். அ.தி.மு.க.,வில் ஒரு சாதாரண தொண்டனும் உச்ச பதவிக்கு வர முடியும். அ.தி.மு.க., ஓர் ஜனநாயக அமைப்புள்ள கட்சி. ஆனால், தி.மு.க.,வோ பணத்துக்காக நடத்தப்படுகின்ற கட்சி. பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தி.மு.க-வில் பதவி கிடைக்கும்.

நம்முடைய கட்சியை உடைக்க வேண்டுமென யார் யாரோ முயன்று பார்க்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் அ.தி.மு.க.,வை தொட்டுப் பார்க்க முடியாது. ஸ்டாலின் அவர்களே நீங்கள் எத்தனை ‘பி’ டீமை உருவாக்கினாலும் எங்கள் கட்சியை அழிக்க முடியாது. அமலாக்கத்துறை வந்துவிடுமோ, வருமான வரித்துறை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இன்றைக்கு தி.மு.க., அமைச்சர்களும், தி.மு.க-வின் முன்னோடி நிர்வாகிகளும் தூக்கம் கெட்டுப் போயிருக்கிறார்கள். செந்தில் பாலாஜியைக் கைது செய்தவுடன் பதறிப்போய் ஸ்டாலின் குடும்பமும், ஒட்டுமொத்த தி.மு.க.,வும் மருத்துவமனையில் கூடியது.

செந்தில் பாலாஜி மீதான அக்கறை எல்லாம் அதற்குக் காரணம் இல்லை. அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி ஏதாவது வாக்குமூலம் கொடுத்துவிட்டால்… என்ற பயம் தான் அதற்குக் காரணம். செந்தில் பாலாஜி மட்டும் வாயைத் திறந்தால் இந்த ஆட்சி கோயிந்தா… இந்த ஆட்சி கவிழ்ந்து போய்விடும். நீங்களும் கோட்டையில் இருக்க மாட்டீர்கள். ஸ்டாலின் ஒரு திறமையில்லாத பொம்மை முதலமைச்சர். யாரோ எழுதிக் கொடுப்பதை என்னவென்று தெரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார். 

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசியவர், “கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் திருச்சிக்கு எவ்வளவோ திட்டங்களைச் செய்திருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை என  திருச்சியிலுள்ள அமைச்சர் கே.என்.நேரு பச்சைப் பொய்யை பேசி வருகிறார். இனியும் இப்படியான பச்சை பொய்யைப் பேசி உங்களுடைய தகுதியை குறைத்துக் கொள்ளாதீர்கள். இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்ன அடிமையான அரசியல்வாதி தான் கே.என்.நேரு.

 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. அரிவாள் கத்தி கலாசாரம் போய் செங்கல்பட்டு கோர்ட்டில் வெடிகுண்டு வீசுகிறார்கள். தி.மு.க.-வின் இந்த இரண்டாண்டு கால ஆட்சி இருண்ட ஆட்சியாகத் தான் இருக்கிறது. மக்கள் மத்தியிலும் தி.மு.க., மீது மிகப்பெரிய அதிருப்தி நிலவி வருகிறது. மக்கள் ஆதரவுடன் அடுத்து நம்முடைய ஆட்சி தான் அமையப் போகிறது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/YEIF68e