“மக்கள் போட்ட பிச்சையால்தான் தி.மு.க-வினர் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் என பதவியில் இருக்கிறார்கள். ஆனால், அதை மறந்து அமைச்சர்கள் `பிச்சை போட்டதாக…’ வாய் கொழுப்பாகப் பேசி வருகின்றனர்” என்று விமர்சித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

செல்லூர் ராஜூ

ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் அ.தி.மு.க மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்களால் பலர் பயனடைந்திருக்கின்றனர். குறிப்பாக எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

அ.தி.மு.க-வில் இளைஞர்கள் அலை அலையாக வந்து சேர்ந்து வருகின்றனர். அ.தி.மு.க மாநாட்டின் மூலம் ஒரு வரலாறு அமையவிருக்கிறது. கட்சி தொடங்கிய காலத்தில், `இது நடிகரின் கட்சி, 50 நாள்கள்கூட நீடிக்காது’ என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், இன்று 50 ஆண்டுகளை நிறைவுசெய்து, தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சியாக தற்போது பொன்விழா மாநாடு கொண்டாடவிருக்கிறது.

செல்லூர் ராஜூ

அ.தி.மு.க தொண்டர்களின் எழுச்சியோடு, அவர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அ.தி.மு.க மாநாடு அமையவிருக்கிறது. தொகுதிக்கு 25,000 பேர் என மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகிறோம். மதுரையில் மற்றொரு சித்திரை திருவிழாபோல மாநாடு இருக்கும். தற்போதுவரை மதுரையில் 1,80,000 பேர் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தக்காளி விலை உயர்ந்ததால், மக்கள் தக்காளியை மறந்து போயிருக்கின்றனர். அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும் காய்கறி விலை ஏற்றமிருந்தது. ஆனால், அதனைச் சமாளிக்க முன்கூட்டியே திட்டம் வகுப்போம். இந்த அரசு கமிஷன், கரப்ஷன் என்பதை நோக்கியே உள்ளது.

அமைச்சர்கள் அனைவரும் தூங்குகிறார்களா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்போது அமலாக்கத்துறை வரும், ஐ.டி துறை வரும் என யோசித்து பயந்துகொண்டே இருக்கிறார்கள். முதல்வரும் அவரது குடும்பமும் செந்தில் பாலாஜி வாய் திறந்து என்ன பேசுவாரோ என பயந்துபோயிருக்கின்றனர்.

மதுரையின் மைந்தனாக இருக்கக்கூடிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார், அவரைக் கண்டுபிடியுங்கள்.

செய்தியாளர் சந்திப்பில் செல்லூர் ராஜூ

மக்கள் போட்ட பிச்சையால்தான் தி.மு.க-வினர் அமைச்சர், எம்.எல்.ஏ என பதவியில் இருக்கிறார்கள். ஆனால், தாங்கள் பிச்சை போட்டதாக அமைச்சர்கள் வாய் கொழுப்பாகப் பேசிவருகின்றனர்.

அ.தி.மு.க மட்டுமே ஜனநாயகத்தின்படி இயங்கும் ஒரே கட்சி. இங்குதான் ஏழை, பணக்காரன், சாதி, மத வேற்றுமைகள் கிடையாது, அனைவரும் உயர் பொறுப்புக்கு வர முடியும். குறிப்பாக தனபால் சபாநாயகராக அமர்த்தப்பட்டார்.

காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் டி.ஐ.ஜி தற்கொலை செய்துகொண்டிருப்பது உண்மையிலேயே மன வேதனையை ஏற்படுத்துகிறது. சி.பி.ஐ உரிய விசாரணை நடத்த வேண்டும்.

திரெட்ஸ் என்ற சமூக வலைதளம் வந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆலோசனை செய்துவிட்டு அதில் சேர்வது குறித்துப் பார்க்கலாம்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/bRG0uk2