தமிழ்நாட்டில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் என்பது நாளுக்கு நாள் பூதாகாரமாகிக் கொண்டே வருகிறது. “தி.மு.க அரசின் திராவிடக் கொள்கைக்கு எதிரான பேச்சு, சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பது, மாநில அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்வது தொடங்கி, சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் வரை… மாநில அரசுடன் முரண்பட்டு நிற்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” என்ற குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ஆளுநர் ரவி செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அவரை மிகக் கடுமையாகச் சாடின. தற்போதுகூட ஆளுநர் ரவி, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்து அவரின் செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கின்றன… இருக்கின்றன என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு விரிவாக புகார் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆளுநர் ரவி

அதில், “மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இருப்பினும், பெயரளவில் மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களாட்சி தத்துவம் என்பது நமது அரசியல் சாசனத்தின் உயிர்நாடி.

இது அரசியலமைப்பின் லட்சியங்கள் முகவுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தியா ஓர் இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு. இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர். அரசியல்வாதியாக மாறும் ஓர் ஆளுநர், அந்தப் பதவியில் தொடரவே கூடாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு ஆளுநர் வெளிப்படையாக முரண்படுவது அல்லது சட்டமன்றம் நிறைவேற்றும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்து முட்டுக்கட்டை போடுவது… அல்லது கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராகச் செயல்படுவது போன்றதொரு சூழ்நிலையை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

இதற்கு முன்பு நாகாலாந்து கவர்னராக திரு. ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பு வகித்தபோதும், அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. உண்மையில் நாகாலாந்து ஆளுநர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்ட பிறகுதான் நாகாலாந்திற்கு ஒரு நிம்மதி ஏற்பட்டுள்ளதாக, நாகாலாந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி) தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பல்வேறு நடவடிக்கைகள், அவர் ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதைப் புலப்படுத்துகின்றன. அதற்கு சில உதாரணங்கள்…

* சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்வது.

* ஊழல் புரிந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள்மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்வது.

* தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியலுக்கு எதிராளியாகச் செயல்படுதல்.

செந்தில் பாலாஜி – ஆளுநர் ஆர்.என்.ரவி

* குற்றவாளிகளை ஆதரித்து, காவல்துறை விசாரணையில் தலையிடுதல். கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரமற்ற மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார்.

* அமைச்சர் செந்தில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து அரசியலமைப்பு மீறலில் ஈடுபடுவது.

ஒருதலைப்பட்சமானவர், தான் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆர்.என்.ரவி. எனவே, அவர் உயர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர். மாண்புகளைப் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் செய்தியில் நாங்கள் குறிப்பிட்டிருப்பது முதல்வர் அனுப்பிய கடிதத்தின் சிறு பகுதி மட்டுமே. முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அனுப்பிய முழு கடிதம் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது…

from Tamilnadu News https://ift.tt/JdfOXA3