18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரின் பாலியல்ரீதியான உறவு தொடர்பான விவகாரத்தைக் கையாள்வது குறித்த வழக்குகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இரு விரல் பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென தமிழக டி.ஜி.பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக சிதம்பரத்தில் சிறுமி ஒருவருக்கு சிறுவன் தாலி கட்டியது தொடர்பான வழக்கு மற்றும் தருமபுரியில் நடைபெற்ற இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்தில் சிறுமிக்குத் தாலி கட்டிய விவகாரத்தில் இருவர்மீதும் தவறில்லை என காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இதனையடுத்து, தருமபுரி இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கில் 17 வயதுக்குட்பட்ட இருவரையும் காவல்துறையினர் நடத்திய விதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்களைக் குழந்தைகளாகக் கருத வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேபோல, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரு விரல் பரிசோதனை செய்யப்படுவதைத் தவிர்க்கும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்துமாறு டி.ஜி.பி-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆண்மைத்தன்மையை சோதனை செய்வதில் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
from Tamilnadu News https://ift.tt/1o4Ncxy
