வேலூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, திராவிட நட்புக் கழகம் சார்பில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் மூத்த அமைச்சர் துரைமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் சத்யராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மத குருமார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், ‘‘வன்முறைகளைத் தூண்டிவிட்டு, இந்த நாட்டையும், தமிழ்நாட்டையும் மதவெறி வேட்டைக் காடாக மாற்றிவிடுவார்களோ… என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. சங் பரிவார்களின் கொட்டம் தலைவிரித்து ஆடத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் இன்னும் அமைப்புரீதியாக வலிமைப் பெறவில்லை. ஆனாலும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சர்ச்சையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

மத நல்லிணக்க மாநாடு

குறிப்பாக, தமிழ்நாட்டு அரசுக்கே நெருக்கடி கொடுக்கிறார்கள். நம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கே சவால் விடுக்கிறார் ஆர்.என்.ரவி. தி.மு.க-வை வீழ்த்தினால்தான் பெரியார் அரசியலை வீழ்த்த முடியும். அதுதான் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஸின் செயல் திட்டம்’’ என்றார் காட்டமாக!

திருமாவளவனைத் தொடர்ந்து பேசிய தலைவர்களும், பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தனர்.

இந்த மாநாட்டுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, ‘‘தமிழ்நாட்டில், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகச் சொல்லியே பிழைப்பு நடத்துவதுதான் திராவிடத்தின் வேலை. பா.ஜ.க சொல்கிற குற்றச்சாட்டுகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் நேர்மையானவர்கள்; அப்பழுக்கற்றவர்கள்.

துரைமுருகன் ஒரு சிறந்த நடிகர். அழுது அழுதே ஓட்டு வாங்கிவிடுகிறார். அவரின் நடிப்புத் திறமைக்கு விருது கொடுக்கலாம். போதாதென்று, பிள்ளையையும் அழைத்துவந்து, ‘தத்துக் கொடுக்கிறேன்’ என்றார். அந்தத் தத்துப் பிள்ளை நாடாளுமன்றத்துக்கும் வருவதில்லை; எம்.பி-யாக மக்களைச் சந்தித்துக் குறைகளையும் கேட்பதில்லை. அதேபோல, திருமாவளவனும் அவரின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியை எட்டிக்கூட பார்ப்பதில்லை. தமிழ்நாட்டில் சாதியில்லை என்று சொல்ல முடியுமா… சாதியை வைத்துதானே திராவிட அரசியலில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதே துரைமுருகன் எந்தச் சமுதாயத்தின் முகமாகப் பார்க்கப்படுகிறார்; இதே திருமாவளவன் எந்தச் சமுதாயத்தின் முகமாகப் பார்க்கப்படுகிறார்… நல்ல திட்டங்களைச் சொல்லியா ஆட்சி செய்கிறார்கள்… ஊழல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

கார்த்தியாயினி

மத நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், ஒரு மதத்துக்கும் இன்னொரு மதத்துக்கும் இவர்கள்தான் பாகுபாடே காட்டுகிறார்கள். இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் எப்போதாவது வாழ்த்துச் சொல்லியிருக்கிறாரா… அவர்கள் குடும்பம் நடத்தும் தொலைக்காட்சிகளில், தீபாவளி, விநாயகர் சதுர்த்தியின்போது ‘விடுமுறைத் தினத்தையொட்டிய நிகழ்ச்சிகள்’ என்று ஒளிபரப்புச் செய்கிறார்களே, ‘என்ன விடுமுறை’ என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா… பா.ஜ.க மதவெறியைத் தூண்டவும் இல்லை; மதத்தை வைத்து அரசியலும் செய்வதில்லை. தமிழ்நாட்டில்தான் அராஜக ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

‘பா.ஜ.க கொடியை ஏற்ற விடமாட்டோம்’ என்று ஆணவத்தோடு ஆட்டம் போடுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்குவந்த பின்னர் தமிழ்நாட்டில் எத்தனை திருக்கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. ‘சமத்துவம்’ என்ற வார்த்தையை சொல்வதற்கே இவர்கள் அருகதையற்றவர்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். தமிழகம் என்பது எப்போதுமே தனி நாடாகாது. இந்தியாவுக்குள்தான் தமிழகம் இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், இவர்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுவார்கள். தமிழக மக்கள் விழித்துக்கொண்டார்கள். நொடிக்கு நொடி சிந்திக்கிறார்கள். மாற்றி மாற்றிப் பேசினால், சட்டையைப் பிடித்து கேள்வி எழுப்புவார்கள். அடுத்தும், மத்தியில் பா.ஜ.க-தான் ஆட்சிக்கட்டிலில் இருக்கும். இனிமேல் இவர்களின் ‘சீரியல்’ எடுபடாது. மக்கள் அனைவரும் ‘வெப்சீரிஸ்’ பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்’’ என்றார்.

from Tamilnadu News https://ift.tt/Rsg5McU