உயரும் கட்டணம்:

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைகளின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதில், “பத்திரப்பதிவுத் துறை சேவைக் கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படவில்லை. எனவே, ஆவணப் பதிவு, பதிவுசெய்யப்படும் ஆவணத்தைப் பாதுகாத்தல், மின்னணு வாயிலாக ஆவண நகல் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, பதிவுச்சட்டம், 1908-ன் பிரிவு 78-ல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டணங்கள் மற்றும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டிருக்கின்றன.

பதிவுத்துறை சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200-ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.10,000-ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்ச முத்திரைத் தீர்வை ரூ.25,000-லிருந்து ரூ.40,000-ஆகவும், தனி மனை பதிவுக் கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.1,000-ஆகவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்குப் பதிவுக் கட்டணம் ரூ.10,000 என உள்ளதை, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் மாற்றப்பட்டிருக்கிறது” என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த அறிவிப்பு ஜூலை 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

அதிகரிக்கும் அரசு வருவாய்:

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பத்திரப்பதிவுத் துறையின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இங்கு வீடு, நிலம், தொழில் தொடர்பாக ஆண்டுக்கு 25 லட்சம் ஆவணங்கள் வரை பதிவுசெய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத்துறையின் மூலம் வரும் வருவாய் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிகிறது. குறிப்பாக, 2015-16-ம் ஆண்டில் 8,562.38 கோடி ரூபாயும், 2016-17-ம் ஆண்டில் 7,007.74 கோடி ரூபாயும், 2017-18-ம் ஆண்டில் 9,121.53 கோடி ரூபாயும் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது.

பத்திரப்பதிவுத் துறையின் வருவாய்

அதேபோல, 2018-2019-ம் ஆண்டில் 11,071.02 கோடி ரூபாயும், 2019-20-ம் ஆண்டில் 11,028.23 கோடி ரூபாயும், 2020-21-ம் ஆண்டில் 10,643.08 கோடி ரூபாயும் வருமானம் கிடைத்தது. 2020-21-ம் ஆண்டைப் பொறுத்தவரை பதிவுத்துறை சார்பில் 13,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கொரோனா பேரிடர் காரணமாக வருவாய் குறைந்தது. அதன் பிறகு வந்த, 2021-22-ம் ஆண்டில் 13,913.65 கோடி ரூபாயும், 2022-23-ம் ஆண்டில் உச்சபட்சமாக 17,296.84 கோடி ரூபாயும் அரசுக்கு வருமானம் கிடைத்திருந்ததாக அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

யாருக்குப் பாதிப்பு?

2022-2023 நிதியாண்டில் மட்டும் தமிழகத்தில் 34,41,248 பத்திரப்பதிவுகள் நடந்திருக்கின்றன. இதன் மூலம், அரசுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைத்திருந்தது. மேலும், பங்கு மற்றும் கடனீட்டுப் பத்திரங்களின் வெளியீடு மற்றும் பரிமாற்றத்துக்கான முத்திரைத் தீர்வை சம்பந்தப்பட்ட பங்குச்சந்தைகள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் திருமணப் பதிவு, சங்கப் பதிவு, சீட்டுப் பதிவு, முத்திரைத் தீர்வை (சந்தைப்படுத்தக்கூடிய பத்திரங்கள்) என மொத்தமாக 250.64 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.

பத்திரப்பதிவு

தற்போது துறை சார்பில் 20 சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், நடப்பு நிதியாண்டில் 5,000 கோடி ரூபாய் வரை அரசுக்குக் கூடுதலாக வருவாய் கிடைக்கலாம் என்று பதிவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அரசுக்கு வருவாய் கிடைப்பது ஒருபுறமிருக்க, கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு தனிமனை பதிவுக்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல, குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து, 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

`நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல!’

இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞரும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் பேசினோம். “ஓர் அரசு மக்களுக்கான சேவையைச் செய்யும் வேலையை மட்டும்தான் பார்க்கவேண்டும். அது லாபநோக்கத்துடன் என்றுமே செயல்பட முடியாது. போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை போன்ற நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. அதற்காக அதன் சேவைக் கட்டணங்களை உயர்த்தி மக்களைக் கஷ்டப்படுத்திவிட முடியாது. இப்போது அந்த வேலையைத்தான் இந்த அரசு செய்துகொண்டிருக்கிறது.

பாபு முருகவேல்

4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பாகப்பிரிவினை பத்திரத்தின் விலையை 10,000 ரூபாயாக உயர்த்தியிருக்கின்றனர். அதேபோல, 10 ரூபாய்க்கு ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு பக்கத்தின் விலையை 100 ரூபாயாக உயர்த்தியிருக்கின்றனர். வருமானம் வரும் துறை என்பதற்காக பதிவுத்துறையின் கட்டணத்தை உயர்த்தி அரசு லாபம் சம்பாதித்து, அதனை மற்ற துறைகளுக்குப் பயன்படுத்துவது ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல. இந்த அரசு தொடர்ந்து வாக்களித்த மக்களைப் பழிவாங்கும் நோக்கில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.

`மக்கள் பாதிக்கப்பட்டால் மாற்றியமைக்கப்படும்!’

பதிவுத்துறையின் கட்டண உயர்வு குறித்து வழக்கறிஞரும் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளருமான தமிழன் பிரசன்னாவிடம் பேசினோம். “ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு சம்பந்தப்பட்ட துறையின் கட்டணங்களை உயர்த்துவது இயல்பான ஒன்று, அது அவசியமும்கூட. கடந்த 20 ஆண்டுகளாகப் பத்திரப்பதிவுத்துறையின் கட்டணங்கள் மாற்றப்படவில்லை. 20 ரூபாயிலிருந்த ஒரு கட்டணம் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அன்று 20 ரூபாய் எப்படியோ… இப்போது 200 ரூபாய் இருக்கிறது. பொதுமக்களைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது.

தமிழன் பிரசன்னா

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பத்திரப்பதிவுத்துறை மிகவும் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தக் கட்டண உயர்வும் மக்களை எந்த வகையிலும் சிறிய அளவுக்குக்கூட பாதிக்காத அளவில்தான், மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்தக் கட்டண உயர்வில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அதைச் சரிசெய்யும் நடவடிக்கையை இந்த அரசு கண்டிப்பாக எடுக்கும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/Kj7v92F