மகாராஷ்டிராவில் கடந்த இரண்டாம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர் அஜித் பவார் தலைமையில் பா.ஜ.க.கூட்டணி அரசில் சேர்ந்தனர். இதனால் சிவசேனாவில் இருந்து விலகி வந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்களது குறையை தெரிவித்தனர். உடனே இது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து விரைவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். ஆனால் எப்போது என்று தெரியாமல் இருந்தது.

அதோடு தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இலாகாவும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது. அஜித் பவாருக்கு நிதித்துறையை கொடுக்க சிவசேனா அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நேற்று இரவு துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தினார். இதில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் படி அடுத்த இரண்டு நாள்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது சிவசேனாவின் சஞ்சய் ஷிர்சாத், பரத் கோகாவாலா உட்பட மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர். பா.ஜ.க.வை சேர்ந்த சஞ்சய் குதே, மாதுரி மிசால், அசிஷ் ஷெலார், நிதேஷ் ரானே ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பிறகுதான் இலாகாக்களை ஒதுக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் மிகவும் அனுபவசாலிகளாக இருப்பதால் அவர்கள் அனைவரையும் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கவேண்டிய நெருக்கடியில் பா.ஜ.க. இருக்கிறது.

அஜித் பவார்

சில அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அஜித் பவாருக்கு நிதித்துறையை கொடுக்க சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவருக்கு வருவாய்த்துறையை கொடுக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. எல்லாம் இரண்டொரு நாளில் தெரிய வரும் என்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

from Tamilnadu News https://ift.tt/8ohlnZB