சுப்ரமணியபுரம் படத்தில் ஓர் காட்சிவரும்… அண்ணனுக்கு தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில், தலைவரான மற்றொருவரை தீர்த்துக்கட்ட சுற்றி இருப்பவர்களுக்கு மூளைச் சலவை செய்வார் சமுத்திரகனி. அந்த காட்சியை நினைவுப்படுத்தும் விதமாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு வழக்கை விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்கிறார்கள் அதிமுக விவரம் அறிந்தவர்கள்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓரம்கட்டப்பட்டு, தனி அணியாக செயல்பட்டு வரும் பன்னீருக்கு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், பா.ஜ.க என யாருமே கைகொடுக்கவில்லை. தொடர் சரிவில் இருக்கும் பன்னீருக்கு, அவரின் மகனான ரவீந்தரநாத்தின் எம்.பி பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதுஒருபுறமிருக்க, மதுரையில் மாநாடு ஏற்பாட்டை எடப்பாடி தரப்பினர் மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தவேண்டும்’ என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு, ஆர்ப்பாட்டமும் அறிவித்து இருக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு விசாரணையை நடத்துவதாக, எடப்பாடியிடன் இணைந்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தார் பன்னீர். ஆனால், இன்று வழக்கை விரைந்து முடிக்கவேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பது பன்னீரின் இரட்டை வேடம் வெளிப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பன்னீருக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடியை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது, வழக்குகள் சாதகமாக முடிவது என ஓவ்வொரு முறையின் எடப்பாடி ஒரு படி மேலே ஏறும்போதும், எங்கள் தரப்பு இரண்டுபடி கீழே இறங்குகிறோம். கடந்த சில மாதங்களாகவே இது தொடர்கிறது. குறிப்பாக டெல்லியுடான தொடர்பு முற்றிலுமாக முறிந்துவிட்டது.

எங்களை பொறுத்தவரையில் இணைப்புக்குதான் முயற்சி செய்கிறோம். பிற நிர்வாகிகள் சம்மதித்தாலும் எடப்பாடி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனவேதான் எடப்பாடியை டார்கெட் செய்யவேண்டும் என்ற முடிவில் ஓ.பி.எஸ் இறங்கி இருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் எடப்பாடி சிக்கியிருக்கிறார். எனவே, அதை வைத்து எடப்பாடியை வளைத்துவிடலாம் என்று எங்கள் தரப்பு ஆலோசகர்கள் சிலர் ஆலோசனை வழங்கினார்கள்.
அதன்படிதான், முதலில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை கையில் எடுத்து, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம் நடத்த முன்வந்து இருக்கிறோம். இதற்கான அறிவிப்பு நாங்கள் வெளியிட்டதுமே, எடப்பாடி தரப்பினர் பதற்றமடைவதை பார்க்க முடிகிறது. இதில் இரட்டை வேடம் எதுவுமில்லை. அன்றைய சூழ்நிலை வேறு. தற்போதைய சூழ்நிலை வேறு. இதை ஓ.பி.எஸ்ஸே பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுப்படுத்திவிட்டார்.” என்றனர் சமாளிப்புடன்…

இதுகுறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம், “கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் குற்றவாளிகளுக்கு திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளார்கள். அதை முதல்வர் ஸ்டாலினும் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இக்குற்றவாளிகளுக்கு தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் ஜாமீன் தாரர்களாக இருந்துள்ளனர். குற்றவாளிகளுக்கும் தி.மு.க-விற்கும் என்ன சம்பந்தம்? ஆகவேதான் இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பேசினார்.
ஆனால், கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தை எடப்பாடியுடன் தொடர்புப்படுத்தி பேசுவது தவறு. அ.தி.மு.க-வுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்றே அரசு செயல்படுகிறது. அதற்கு உறுதுணையாக ஓ.பி.எஸ்-ஸும் செயல்படுகிறார். தி.மு.க ‘பி’ டீமாக செயல்படும் ஓ.பி.எஸ் அரசியலில் தான் ஜீரோவாக ஆகிவிட்டதால் எதாவது பேசி, தனது இருப்பை தக்கவைக்க பேசுகிறார். துரோகம் , முதுகில் குத்துவது, ஆதாயத்துக்காக காட்டிக் கொடுப்பது போன்றவையெல்லம் ஓ.பி.எஸ்.ஸுக்கு கைவந்த கலை. அவரைப்பற்றி பேசுவது, நேரம்தான் வீணாகும்.” என்றார் காட்டமாக…
தொடர்ந்து பன்னீர் தரப்பின் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜிடம் பேசினோம்…
“ஒன்றரை கோடி தொண்டர்கள் உயிரிலும், உதிரத்திலும் சுமக்கிற அம்மா வசித்த கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நிகழ்த்தி அதன் தொடர்ச்சியாக ஆறு உயிர்களை கொலை செய்த பாதகர்களை, இந்த கொடுஞ் செயலை திட்டமிட்டு நடத்திய கொடூரனை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதற்காக ஆகஸ்டு 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிவித்திருக்கிறார்.

இதில் எங்குமே எடப்பாடி என்ற பெயரையே நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் சொல்லாத ‘எடப்பாடி’ பெயரை வரிக்கு வரி குறிப்பிட்டு எடப்பாடி வகையறாவுக்கு குளிர் காய்ச்சல் வருவது எதற்காக? கொடநாட்டில் சம்பவம் நடந்து ஆறு ஆண்டு காலம் கடந்துவிட்ட நிலையில், எடப்பாடி அதுகுறித்து பொதுவெளியில் பேசியதே இல்லை. மெளனத்தின் பின்னணியில் மர்மம் இருக்கிறது என மக்கள் சந்தேகிக்கும் நிலையில், இப்போது ஆர்ப்பாட்ட அறிவிப்பு வந்த விநாடியில் இருந்து எடப்பாடி தரப்பினர் குதிப்பது ஏன்? கொந்தளிப்பது ஏன்? கொலை கொள்ளை சம்பவத்தில் எடப்பாடிக்கு தொடர்பு இருப்பது, அவரது தரப்பின் பதற்றமே உறுதிபடுத்துகிறது.” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/9KsL3yw
