நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், மத்திய பா.ஜ.க அரசு பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது தொடர்பான விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது. அதற்காக இந்தியச் சட்ட ஆணையத்தையும் அமைத்திருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “பன்முகச் சமூகக் கட்டமைப்புக்குப் பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறோம். சில சீர்திருத்தங்களின் அவசியத்தை நாம் உணரும் அதேவேளையில், பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது. நமது சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்புக்குச் சவால் விடுப்பதாகவும் இருக்கிறது. இந்தப் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்ப்பதற்கான காரணங்கள்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள்:
மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய பகுதி. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை உறுதி செய்திருக்கிறது. அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக இருக்கின்றன. அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.

ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையேகூட பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்துக்கும் இடம், வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்தக் கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை. அதன் காரணமாகத்தான், அரசியலமைப்பில் 44-வது பிரிவில் ஒரு முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பொது சிவில் சட்டம் மீண்டும், மீண்டும் எதிர்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் 21-வது சட்ட ஆணையமும், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கதல்ல என்று தெளிவுபடக் கூறியிருக்கிறது.
அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது, அரசியலமைப்புச் சட்டநெறிமுறைகளுக்கு முரணாக அமைவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும், குழப்பத்துக்கும் வழிவகுக்கும். தனிநபர் சட்டங்கள் சிறுபான்மைச் சமூகங்களுக்குச் சில பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குகிறது. ஆனால், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத. கலாசார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே கருதுகிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமைக்கும், கலாசாரப் பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற நாடு இந்தியா. பொது சிவில் சட்டத்தைத் திணிக்க முயல்வதன் மூலம், இந்தப் பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படுவதோடு, நமது நாட்டின் பன்முகக் கட்டமைப்பின் சாராம்சத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இது வழிவகுக்கும். பழங்குடிச் சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள், நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம்.
ஒவ்வொரு மதக் குழுவுக்கும், அதன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் பிரிவு 25-ன் கீழ் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை பொது சிவில் சட்டம் மீறுவதாகத் தெரிகிறது. மேலும், பிரிவு 29, பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் தனித்துவமான கலாசாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை வழங்குகிறது. பொது சிவில் சட்டம் போன்ற ஒரு சட்டத்தைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியும், மத விவகாரங்களில் அரசின் அத்துமீறலாகக் கருதப்படும். இது எதிர்காலத்தில் தனிமனித சுதந்திரங்கள்மீதான ஆக்கிரமிப்புகளுக்கு கவலைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கிடும்.

கூட்டாட்சி அமைப்பு:
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மாநிலங்களுக்கு தன்னாட்சியை வழங்குகிறது மற்றும் அவற்றின் தனித்துவமான சமூக-கலாசார அடையாளங்களை மதிக்கிறது. தனிநபர் சட்டங்களை மையப்படுத்துவதன் மூலமும் மாநிலங்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதற்கான உரிமைகளை அழிப்பதன் மூலமும், பொது சிவில் சட்டம் இந்தக் கோட்பாட்டை மீறுகிறது. மாநிலங்களின் செயலூக்கமான பங்கேற்பு மற்றும் ஒப்புதல் இல்லாமல் தனிநபர் சட்டங்களில் எந்தவொரு சீர்திருத்தமும் நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும். தனிநபர் சட்டங்களில் உள்ள சீரான தன்மை ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. பலவகையான மத பண்பாட்டு மொழி வேறுபாடுகள் உள்ள நமது நாட்டில், மத நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமானது. முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கக்கூடிய சிவில் சட்டத்தை திணிப்பதைவிட, மக்களிடையே பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் மேம்படுத்துவது முக்கியம்.

இந்தியாவில் தனிநபர் சட்டங்கள் பல நூற்றாண்டுகளாக பரிணமித்திருக்கின்றன; பல்வேறு சமூகங்களின் வரலாற்று, கலாசார, மத சூழல்களில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. பொது சிவில் சட்டத்துக்கான முன்மொழிவு இந்த வரலாற்று அம்சத்தை அங்கீகரிக்கத் தவறுகிறது. பல்வேறு மதக் குழுக்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகாத ஒரு சட்டத்தைத் திணிக்கும் முயற்சி பலனிலிக்காது.
அரசியலமைப்பின் 29-வது பிரிவின்மூலம் சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பாதுகாக்கும் மதச்சார்பற்ற நாடு இந்தியா என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகள், மாவட்ட மற்றும் வட்டார கவுன்சில்கள் மூலம் தங்கள் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாப்பதை உறுதி செய்கிறேன். பொது சிவில் சட்டம் இயல்பிலேயே அத்தகைய பழங்குடிச் சமூகங்களை அதிக அளவில் பாதிக்கும் மற்றும் அவர்களின் பாரம்பர்ய நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அடையாளங்களைப் பின்பற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் அவர்களின் உரிமையைக் குறைமதிப்புக்கும் உட்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கியதாக பொது சிவில் சட்டம் அமைந்திருக்கிறது.

நமது சமூகத்தில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொள்ளாமல், ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். வெவ்வேறு சமூகங்கள் வளர்ச்சி, கல்வி மற்றும் விழிப்புணர்வின் வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருக்கின்றன. அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரேமாதிரியான அணுகுமுறை தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக்கூடும். இணக்கமான வாழ்வுக்கு முன்னுரிமை, எல்லாவற்றிற்கும் மேலாக, நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு சமூகங்களிடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ஒரே மாதிரியான சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கிடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவதிலும் சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை வரையறுக்கும் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம். தற்போதைய நிலையில் மாநில அரசுகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் இந்தச் சட்டம் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு முக்கியமானது.

மேற்காணும் கருத்துகளைத் தீவிரமாகப் பரிசீலித்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்தியைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டங்களில், ஒரேமாதிரியான தன்மையைக் கொண்டுவர முயல்வதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தின் தன்மை வழிவகுக்காது என்ற அடிப்படைக் கோட்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் பலம், அதன் பன்முகத்தன்மையில் இருக்கிறது, பொது சிவில் சட்டத்தின் மூலம் அதை ஒருமுகப்படுத்த முயல்வதைவிட… நாம் நமது பன்முகத்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/5LOpRs1
