பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுவது அவசியம்” என்று கூறியிருந்தார். பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணையம் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டிருக்கிறது.

பிரதமர் மோடி

சுமார் 50,000 கருத்துகள் சட்டம் ஆணையத்தால் பெறப்பட்டிருப்பதாகவும், இன்னும் சில நாள்களில் குறிப்பிட்ட சில அமைப்புகளை அழைத்து சட்ட ஆணையம் நேரடியாக கருத்துகளைக் கேட்கவிருக்கிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

பொது சிவில் சட்டத்துக்கு சிறுபான்மையினர், பழங்குடியினர், எதிர்க்கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்களை சிறுபான்மை அமைப்புகள் நடத்தி வருகின்றன. பொது சிவில் சட்டம் குறித்த யோசனையை வாபஸ் வாங்குங்கள் என்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின அமைப்புகள், சட்ட ஆணையத்திடம் வலியுறுத்தியிருக்கின்றன.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், “பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், பழங்குடியினரின் கலாசாரமும் பாரம்பர்யமும் கடுமையாகப் பாதிக்கப்படும். சத்தீஸ்கரில் பல்வேறு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். பழங்குடியினரின் கலாசாரம், பண்பாடு, சட்டத் திட்டங்கள் ஆகியவை அவர்களின் வழக்கமான மரபுகளின்படியே இருக்கின்றன. அவற்றை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இப்படியான சூழலில், பொது சிவில் சட்டத்தை உருவாக்கினால், நம்முடைய பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களும், பண்பாடும், பாரம்பர்யமும் என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பினார்.

பொது சிவில் சட்டத்தை உறுதியாக எதிர்க்கும் பூபேஷ் பாகேல் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியோ, இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. ‘பொது சிவில் சட்டம் குறித்து பா.ஜ.க பேசுவது, வாக்காளர்களைப் பிரிக்கும் முயற்சி’ என்று விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி, ‘பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும்வரை, இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது’ என்று கூறியிருக்கிறது.

ப.சிதம்பரம்

அதே நேரத்தில், பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசு அறிவித்தால், அது பற்றிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க கட்சியினரைத் தயார்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது. இதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் சட்ட நிபுணர்கள் உட்பட எட்டு பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமைத்திருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ப.சிதம்பரம் தலைமையிலான குழு, பொது சிவில் சட்டம் குறித்து ஆராய்ந்து, கட்சித் தலைமைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் என்றும், அது பற்றிய அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாது என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ‘பொது சிவில் சட்டம் குறித்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுக்கவில்லை. நூறு ஆண்டுகள் பழைமையான காங்கிரஸ் கட்சி, இந்தப் பிரச்னை தொடர்பாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுக்கிறது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்திருக்கிறது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில், பொது சிவில் சட்டம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அது தொடர்பாகப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், “பொது சிவில் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காததால், அந்தக் கட்சியை கருத்தரங்கத்துக்கு அழைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

ராகுல் காந்தி

பொது சிவில் சட்டத்துக்குப் பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களுக்கு மட்டும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று பா.ஜ.க-வில் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பா.ஜ.க அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களையும் சட்டங்களையும் உறுதியாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, பொது சிவில் சட்டம் தொடர்பாக நிலைப்பாடு எடுக்கத் தடுமாறுவது ஏன் என்பது தெரியவில்லை.

from Tamilnadu News https://ift.tt/LXsTKOq