கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பணியாற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கும் உத்தரவு வெளியாகியுள்ளது. அதிலும், குறிப்பாக, இந்த மாதம் முதலே ஊதியம் கொடுக்கப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு…

”மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டது. மக்கள் நலப்பணிகளைச் சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
நகராட்சி மேயர்களுக்கு ரூ. 30,000, துணை மேயர்களுக்கு ரூ.15,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10,000. இதே போன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூ. 15,000, துணைத் தலைவர்களுக்கு ரூ.10,000 மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ. 5000 மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும், பேரூராட்சித் தலைவர்களுக்கு ரூ.10,000, பேரூராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூ.5000 மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ. 2,500 மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம், இந்த ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, “மாமன்றத்தில் நான் பங்கேற்ற முதல் கூட்டத்திலிருந்து இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. பெண் உறுப்பினர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தத் தொகை வழங்குவது ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கும். எங்களையும் அங்கீகரத்து ஊக்கத்தொகை அறிவித்திருப்பது மகிழ்ச்சி. எனக்கு உண்டான வாகன செலவுகளுக்குப் போக, என் குடும்பத்துக்கும், முக்கியமாக என் குழந்தைக்குத் தேவையான விசயங்களை யாரையும் சாராமல் செய்யப்போகிறேன். அதனால் எனக்கு மகிழ்ச்சி” என்றார்

இது குறித்து நம்மிடம் பேசிய (திமுக) சென்னை 137-வது வார்டு கவுன்சிலரும், கணக்கு மற்றும் தணிக்கை நிதிக் குழு தலைவருமான தனசேகரன், “முன்பு, எங்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. மன்றம் கூடும்போது பயணப்படியாக ரூ. 800 வழங்கப்பட்டது. முன்பு, சைக்கிளில் உறுப்பினர்கள் சென்று பிரச்னைக் குறித்து பேசியிருக்கலாம். ஆனால், இன்று ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் என அனைவரும் பெட்ரோல் வாகனம் வைத்திருக்கிறோம். நாள்தோறும் வார்டுக்கு செல்ல வேண்டும். அதற்குப் பெட்ரோல் போடுவது கூட சிரமமாக இருக்கும். அடிப்படையில் எங்களுக்கு செலவுகள் நிறைய இருந்தது.
திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தபின் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ஊதியம் கொடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை வைத்தோம். ஆனால், நிதிநிலை காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி, வாழ்த்துகிறோம். தவிர, ஊராட்சி அளவில் ஒன்றிய செயலாளர்களுக்கு கார் வழங்கப்பட்டது. அது மாநகராட்சியான சென்னையில் மண்டல பொறுப்பாளர்களாக 6 பேர் இருக்கிறோம். எங்களுக்கு கார் வழங்கினால் மேலும் உதவியாக இருக்கும் என்னும் கோரிக்கையும் வைத்துக்கொள்கிறோம்” என்றார்.

இது குறித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (வார்ட் எண்: 98 ) அயனாவரம் கவுன்சிலர் பிரிய தர்ஷினி பேசுகையில், “கேரள அரசாங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே, கவுன்சிலர்களுக்கு ஊதியத்தொகையை கொடுத்து வருகிறது. அதை அடிப்படியாக வைத்துதான், எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுப்பினர்களுக்கு ஊதியம் கொடுப்பது தொடர்பாகப் பேசியிருந்தேன். அதை வழிமொழிந்து அரசு எங்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதை வரவேற்கிறோம். மக்களிடம் பிரச்னைகளைக் கேட்க செல்லும்போதும் கூட பல சிரமங்கள் இருந்தன. வண்டிக்குப் பெட்ரோல் போடக்கூட காசிருக்காது. இது எங்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும். இன்னும் சிறப்பாக களப்பணி ஆற்றுவோம்” என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுக வார்டு கவுன்சிலர் லட்சுமி, “இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகை குறைவுதான். ’நாங்கள் மாநகராட்சி உறுப்பினர்களுக்கு ரூ.25,000 – 30,000 வரை கிடைக்கும்’ என எதிர்ப்பார்த்தோம் . அதனால் இது ஏமாற்றம் தான். ஆனால், இது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இது நகராட்சி, பேரூராட்சியில் இருக்கும் உறுப்பினர்களுக்கு மிகவும் குறைவான தொகை என்பதையும் மறுக்கமுடியாது” என்றார்.
இது குறித்து 107-வது வார்டு கவுன்சிலர் கிரண் சர்மிலி கூறியதாவது, “சென்னை மாமன்ற உறுப்பினர்களில் பாதிக்குப் பாதி பெண்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பணி செய்யும்போது சில அடிப்படை செலவுகள் செய்யவேண்டி வரும். குறிப்பாக, வார்டில் எதாவது தூய்மை பணி செய்தால், கூடுகின்ற மக்கள் நான் ஒரு டீயாவது வாங்கி தர வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். அதேவேளையில், பெரும்பாலான பெண்களுக்கு மற்ற தொழில்களோ… அதனால் வருமானம் கிடைக்கும் எந்த நிலையோ இல்லை. இதனால், திருமாணவர்கள் கணவரையோ, ஆகாதவர்கள் தந்தையையோ சார்ந்து இருக்க வேண்டிய சூழல்தான் ஏற்படுகிறது.

எனவே, இந்தத் தொகை பெண்களை யாரையும் சாராமல், சொந்தமாக மக்கள் பணியைச் செய்ய உதவும். இந்த ஜூலை முதலாக மதுப்பூதியம் கிடைக்கும் என சொல்லியிருக்கிறார்கள். கடந்த 1.5 ஆண்டுகளுக்கான விடுபட்ட (Arrears) தொகை கிடைக்குமா? என்பது குறித்த தகவல் இல்லை. இருப்பினும், சென்னை போன்ற ஒரு சிட்டியில் மாதம் ரூ.10,000 என்பது குறைவுதான். நாங்கள் அதிகமாக எதிர்ப்பார்த்தோம். வண்டிக்குப் பெட்ரோல் தொடங்கி பல செலவுகள் இருக்கிறது. இது போதாதுதான். ஆனால், Something better than Nothing. இந்த நடவடிக்கை எடுத்த அரசுக்கு மாமன்ற உறுப்பினர்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.
from Tamilnadu News https://ift.tt/TAJjgwX
