பிரான்ஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டங்கள் தலைநகர் பாரீஸில் ஜூலை 14-ம் தேதி நடைபெறுகின்றன. அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். அதையடுத்து, இரண்டு நாள்கள் பயணமாக பிரான்ஸுக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. இந்தப் பயணத்தின்போது, பிரான்ஸிடமிருந்து கடற்படை பயன்பாட்டுக்கான 26 ரஃபேல் விமானங்களும், மூன்று ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களும் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இது சுமார் ரூ.90,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துக்கு நேற்றைய தினம் defence acquisition council ஒப்புதல் அளித்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததாக மத்திய பா.ஜ.க அரசுமீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதனால், இந்திய அரசியலில் ரஃபேல் விமானங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
2007-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, இந்தியாவின் போர்ப் படையை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவுசெய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் 2012-ல் இறுதிசெய்யப்பட்டது. அதில், பறக்கத் தயாரான நிலையிலுள்ள 18 ரஃபேல் போர் விமானங்களை இறக்குமதி செய்யவும், மீதமுள்ள 108 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் `டசால்ட்’ விமான நிறுவனம் மற்றும் பெங்களூருவிலுள்ள ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்துடன் இணைந்து `தொழில்நுட்ப பகிர்வு’ மூலம் இந்தியாவிலேயே கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டது.

ஆனால், 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து, பிரதமராக மோடி பதவியேற்றார். அதன் பிறகு, 126 ரஃபேல் விமானங்களுக்குப் பதிலாக, பறக்கத் தயாரான நிலையிலுள்ள 36 ரஃபேல் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவுசெய்தது. 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி பாரீஸுக்குச் சென்றபோது பிரான்ஸ் – இந்தியா இடையே ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், 36 விமானங்களுக்கு ரூ.58,000 கோடி தருவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்காக, 15 சதவிகித முன்பணம் செலுத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில், பிற ஆயுதங்கள், உதிரிபாகங்கள், விண்கற்களைத் தாக்கும் அதிநவீன ஏவுகணை ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டது. அந்த ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. குறிப்பாக, ரஃபேல் விமானங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன என்றும், இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. மேலும், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்துக்கு வெறும் பத்து நாள்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் காங்கிரஸ் கட்சி முன்வைத்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தீர்ப்பளித்தது.

தற்போது, இந்திய கடற்படைக்கு விமானங்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் பற்றாக்குறையாக இருப்பதால், உடனடியாக அவற்றை பிரான்ஸிடமிருந்து வாங்குவதற்கு இந்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. பிரதமர் மோடியின் தற்போதைய பிரான்ஸ் பயணத்தின்போது, ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருக்கின்றன. அதனால், ரஃபேல் விமானங்கள் பற்றிய விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. இந்தியா-பிரான்ஸ் இடையிலான வர்த்தகம், தொழில் உட்பட பல்வேறு துறைகளில் இருக்கும் உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கவிருக்கிறார்கள்.
இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.90,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன என்கிற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, 26 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவிருக்கிறது. இவற்றில், 22 ரஃபேல் விமானங்கள் ஒற்றை இருக்கையுடனும், நான்கு ரஃபேல் போர் விமானங்கள் இரண்டு இருக்கைகளுடனும் இருக்கும். இரண்டு இருக்கைகள் கொண்ட ரஃபேல் போர் விமானங்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தங்களால் பிரான்ஸ் மிகப்பெரிய அளவுக்கு ஆதாயம் அடையவிருக்கிறது. 2017 முதல் 2021 வரை, இந்தியாவுக்கான 85 சதவிகித பாதுகாப்புத் தளவாடங்கள் ரஷ்யா (46 சதவிகிதம்), பிரான்ஸ் (27 சதவிகிதம்), அமெரிக்கா (12 சதவிகிதம்) ஆகிய நாடுகளிடமிருந்து வாங்கப்பட்டிருக்கின்றன. 1998-ம் ஆண்டு இந்தியா மேற்கொண்ட அணு சோதனைகளை ஆதரித்த சில நாடுகளில் பிரான்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/GoIB4JQ
