திருநங்கைகள், திருநம்பிகள் தங்களது வாழ்க்கைமுறையை தங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்வதில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டதை சில திருநர்கள் விழா எடுத்தும் கொண்டாடுவார்கள். உலகம் முழுவதும் இந்த நடைமுறை உள்ளது.

ஆனால் ரஷ்யாவில் தற்போது பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ+

இந்த மசோதாவுக்கு முதன்முதலில் ரஷ்யாவின் டுமா மாநிலம்தான் ஒப்புதல் அளித்தது. தற்போது இதற்கு நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் மற்றும் சில சம்பிரதாயங்களுக்காக, அதிபர் விளாடிமிர் புதினின் ஒப்புதல் தேவை.

இதுபற்றி டுமாவின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின், “எங்கள் குடிமக்களையும் எங்கள் குழந்தைகளையும் இந்தச் சட்டம் பாதுகாக்கும். பாலின மாற்று அறுவை சிகிச்சை என்பது நம் தேசத்தின் சீரழிவுக்கான பாதை. குடும்பங்கள் மற்றும் பாரம்பர்ய விழுமியங்களை காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரே ஐரோப்பிய நாடு நாங்கள் மட்டுமே. நாம் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால், இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எதிர்காலம் இருக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

நேற்று இந்த மசோதாவின் இறுதி வாசிப்பின் போது மேலும் புதிய திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் பாலின மாற்றங்களுக்கு உள்ளான நபர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கத் தடை, மற்றும் ஏற்கெனவே பாலின மறுசீரமைப்புக்கு உட்பட்டு திருமணம் செய்துகொண்டவர்களின் திருமணங்கள் ரத்து செய்யபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை

இந்த மசோதாவுக்கு LGBTQ அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலின மாற்றத்துக்குப் பின் மருத்துவ சேவையை அணுக முடியாத இளைஞர்களிடையே தற்கொலை முயற்சிகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

“இது மக்களின் மருத்துவப் பராமரிப்பின் அடிப்படை உரிமையை பறிக்கிறது. பாலின மாற்றமடைந்தவர்களை அரசு எதிரியாக நினைத்து எங்கள் உரிமைகளை பறித்து உதவியற்றவர்களாக விட்டுவிடக்கூடும். இதனால் பாலின மாற்றமடைந்த இளம் வயதினர் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்” என திருநர்களுக்கு ஆதரவளிக்கும் `சென்டர் டி’ அமைப்பின் தலைவர் டுவோர்கின் கூறியுள்ளார். ஏற்கெனவே பாகுபாடு காட்டப்பட்டு களங்கப்படுத்தப்பட்ட இந்தச் சிறிய குழுவை முற்றிலும் அடக்கவே அரசு இப்படிச் செய்வதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

from Tamilnadu News https://ift.tt/fTEnHDI