மகாராஷ்டிராவில் கடந்த 2-ம் தேதி திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 8 பேர், பா.ஜ.க கூட்டணி அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். அதோடு தேசியவாத காங்கிரஸ் தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி, கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் கமிஷனில் அஜித் பவார் அணி மனு கொடுத்துள்ளது. அமைச்சர்களாகப் பதவியேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. தற்போதுதான் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

சரத் பவார்

இதையடுத்து அஜித் பவார் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கொண்ட சரத் பவாரின் மனைவி பிரதிபா பவாரை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இது நடந்து இரண்டு நாள்களில் சரத் பவாரைச் சந்தித்துப் பேச அஜித் பவார், சகன் புஜ்பால், ஹசன் மூஸ்‌ரீஃப், திலிப் வல்சே பாட்டீல், கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் ஆகியோர் ஒய்பி சவான் சென்டருக்குச் சென்றனர்.

சரத் பவார் எந்தக் கூட்டம் நடத்தினாலும் ஒய்பி சவான் சென்ட்டரில் நடத்துவதுதான் வழக்கம். எனவேதான் அதிருப்தி தலைவர்கள் அனைவரும் ஒய்பி சவான் சென்ட்டருக்குச் சென்றுள்ளனர். இது தொடர்பான செய்தியைக் கேள்விப்பட்டு சரத் பவாரின் ஆதரவாளர்களான ஜிதேந்திர அவாத், ஜெயந்த் பாட்டீல் ஆகியோரும் ஒய்பி சவான் சென்ட்டருக்கு விரைந்துள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து பிரபுல் பட்டேல் கூறுகையில், “எங்களது கடவுளைச் சந்தித்தோம். கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற வந்தோம். எந்தவித அனுமதியும் பெறாமல் வந்தோம்.

பிரபுல் பட்டேல்

கூட்டம் ஒன்றுக்காக சரத் பவார் இங்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். எனவே அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தோம்.

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் சரத் பவார் அது குறித்து எதுவும் சொல்லவில்லை. நாங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு வந்துவிட்டோம்” என்று தெரிவித்தார். இரு அணிகளும் பிரிந்த பிறகு முதன் முறையாகச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

from Tamilnadu News https://ift.tt/9NQV4l5