பாகிஸ்தானின் சிந்துவிலுள்ள இந்துக் கோயில்மீது ராக்கெட் லாஞ்சர்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் வாழும் இந்து மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் காஷ்மோர் பகுதியில் நேற்று அதிகாலை இந்து மக்களுக்குச் சொந்தமான சிறிய கோயில் மற்றும் அதை ஒட்டிய வீடுகள்மீது மர்மக்கும்பல் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், காஷ்மோர் எஸ்.எஸ்.பி இர்பான் சம்மோ தலைமையிலான போலீஸ் பிரிவு சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தது.

பப்ஜி

தாக்குதல் நடந்த இந்துக் கோயிலானது பக்ரி சமூகத்தால் (Bagri Community) நடத்தப்படும் மத சேவைகளுக்காக ஆண்டுதோறும் திறக்கப்படும் கோயில் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வை அறிந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் செல்லுவதற்கு முன்பாக, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மக்கும்பல் தப்பி ஓடிவிட்டது எனக் கூறப்படுகிறது. போலீஸார் இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்துவருகின்றனர்.

இது தொடர்பாக பக்ரி சமூகத்தைச் சேர்ந்தவர், “மர்மநபர்களால் ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்கத் தவறியதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை” என்று கூறினார். இந்த நிகழ்வால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் பெரும் பீதியில் இருக்கின்றனர். அங்குள்ள மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சீமா என்ற பெண்ணுக்கும், இந்தியாவைச் சேர்ந்த சச்சின் என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் இருவருக்கும் 2019-ம் ஆண்டு பப்ஜி விளையாட்டு மூலம் காதல் மலர்ந்திருக்கிறது. நான்கு குழந்தைகளுக்குத் தாயான சீமா, அவரின் கணவரை விட்டுவிட்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வந்து சச்சினுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்

மேலும், அவர்கள் டெல்லிக்கு அருகிலுள்ள பகுதியில் உணவுப்பொருள் அங்காடி நடத்திவருவதாக உத்தரப்பிரதேச காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. நேபாளம் வழியாக விசா இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக ஜூலை 4 அன்று கைதுசெய்யப்பட்டார். ஏழு வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளுடன், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக சச்சினும் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் அவர்கள் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்கள்.

பாகிஸ்தான்

இதைக் காரணமாகக்கொண்ட இந்த மர்மக்கும்பல், உயர் தர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்துக் கோயில்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அச்சுறுத்தியிருக்கின்றனர். இதையடுத்து, சில நாள்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே சீமா பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த விவகாரம், மர்மநபர்கள் சிந்து பகுதியிலுள்ள இந்துக் கோயில்கள்மீது தாக்குதல் நடத்தியதற்கான காரணமாக கூறப்படுகிறது.

மு அவந்திகா

from Tamilnadu News https://ift.tt/cGdYBPV