நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு, ஒன்பது மாதங்கள் இருக்கின்றன. ஆனாலும், அதற்கான பரபரப்பு இப்போதே ஆரம்பித்துவிட்டது. அந்தப் பரபரப்பைத் தொடங்கிவைத்திருப்பவை எதிர்க்கட்சிகள். மத்தியில் இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க-வை வரும் தேர்தலில் தோற்கடித்தே தீருவது என்று கங்கணம் கட்டி, களத்தில் இறங்கியிருக்கும் எதிர்க்கட்சிகள், கடந்த மாதம் பாட்னாவிலும், தற்போது பெங்களூரிலும் ஒன்றிணைந்திருக்கின்றன.

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் ஒருங்கிணைத்தார். பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைத்திருக்கிறது. பாட்னா கூட்டத்தில் 17 கட்சிகள் பங்கேற்ற நிலையில், நேற்றும் இன்றும் (ஜூலை 17, 18) பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன.

இந்தச் சூழலில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பலமான எதிர்த்தரப்பு இல்லாத காரணத்தால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது விழித்திருக்கிறது. அந்த ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை சற்று மிரட்சியுடன் பார்க்கிறது. ‘நாங்களும் கூட்டம் போடுவோம்’ என்று, தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளையெல்லாம் அவசர அவசரமாக டெல்லிக்கு வரவழைக்கிறது பா.ஜ.க. பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூடும் இதே நாளில், மாலையில் தலைநகர் டெல்லியில் கூடுகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி.

இதே நாளில் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயரில் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி. இப்போதும்கூட, மணிப்பூர் வன்முறை பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை.

மோடி

மாறாக, ‘பெங்களூரில் ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் ஊழல்வாதி விசாரிக்கப்படுகிறார் என்றால், அதற்கு எதிராக இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த ஊழல்வாதி குரல் கொடுக்கிறார். இந்த ஊழல்வாதிகளுக்கு வாக்களித்தால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள், தங்கள் சந்ததிகளை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்’ என்று எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர் மோடி.

குறிப்பாக, தி.மு.க-வை `ஊழல் கட்சி’ என்று கடுமையாக அவர் சாடியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் மோடிக்கு ஏற்பட்டிருக்கும் பதற்றம், அவரின் பேச்சில் வெளிப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் வருகையால் பெங்களூரு நகரம் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட ஏழு முதல்வர்களும் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் உட்பட பல முன்னாள் முதல்வர்களும் பங்கேற்றிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் கூட்டம் – பெங்களூரு

தற்போது பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களும், அடுத்து ஆட்சியைப் பிடிக்கக்கூடிய அளவுக்கு பல மாநிலங்களில் செல்வாக்குடன் இருக்கும் கட்சிகளின் தலைவர்களும் பெங்களூரு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க தலைமையிலான கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்துகொள்கின்றன என்று அந்தக் கூட்டணியினர் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அதில் அ.தி.மு.க போன்ற சில கட்சிகளைத் தவிர, பெரும்பாலான கட்சிகள் சிறிய கட்சிகள்தான். சிவசேனாவை உடைத்துக்கொண்டு வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறிய அஜித் பவார் தலைமையிலான கட்சி, பா.ம.க., சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் டெல்லி கூட்டத்தில் பங்கேற்கின்றன.

மோடி-அமித் ஷா

பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை சிறிய கட்சிகள். அதில் பாஜக-வே பலமான கட்சியாக இருக்கிறது. மேலும், இவ்வளவு காலம் பா.ஜ.க-வால் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பல கட்சிகளை இழுத்துப்பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தக் கட்சிகளுக்கு பா.ஜ.க எந்த அளவுக்கு நம்பிக்கை அளிக்கப்போகிறது, கூட்டணியை வலுப்படுத்த பா.ஜ.க-விடம் இருக்கும் வேறு வியூகங்கள் என்னென்ன என்று பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இந்தக் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்.

இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு  I.N.D.I.A (Indian National Democractic Inclusive Alliance) `இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கக் கூட்டணி’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்தகட்ட கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும், அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

from Tamilnadu News https://ift.tt/w7oPRGx