நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. இதற்காக இன்று கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 26 கட்சிகள் கலந்துகொண்ட `எதிர்க்கட்சிக் கூட்டம்’ நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி, ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தை பிரதமர் மோடி முதல் பா.ஜ.க-வைச் சேர்ந்த அனைவரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், `காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் விருப்பமில்லை’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய கார்கே, “காங்கிரஸுக்கு அதிகாரத்திலோ அல்லது பிரதமர் பதவியிலோ ஆர்வம் இல்லை. இந்த எதிர்க்கட்சிகளின் சந்திப்பின் நோக்கம் நமக்கான அதிகாரத்தைப் பெறுவது அல்ல.
நமது அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதியைப் பாதுகாப்பதே முதன்மையான நோக்கம். நாம் 26 கட்சிகள், 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தனித்து 303 இடங்களைப் பெறவில்லை. தோழமைக் கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவர்களைப் புறக்கணித்து வருகிறது. எனவே, மாநில அளவில், நம்மில் சிலருக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த வேறுபாடுகள் கருத்தியல் வேறுபாடுகளல்ல.

இந்த வேறுபாடுகள் அவ்வளவு பெரியவையுமல்ல என்பதை கவனத்தில் கொள்கிறோம். சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்காக, இளைஞர்களுக்காக நாம் ஒன்றுபட்டிருக்கிறோம். ஏழைகள், தலித்துகள், பழங்குடிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் திரைமறைவில் அமைதியாக நசுக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து இன்னும் தீவிரமாக களம் காண வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கக் கூட்டணி (I.N.D.I.A)” எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/2HbxR3E
