அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அன்றிரவு விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அதிகாரிகள் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

செந்தில் பாலாஜி

மருத்துவமனையில் அமைச்சரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்புகள் இருப்பதை உறுதிசெய்தனர். மேலும், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்தனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சரின் உறவினர்கள், அறுவை சிகிச்சைக்காக அவரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரினர். ஆனால், அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கவே, இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது.

நீதிமன்ற விசாரணையில் அவரை காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 21.06.2023 அன்று அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி

மருத்துவச் சிகிச்சை ஒருபக்கம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், அமைச்சரைக் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி வேண்டிய வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வரும் 26-ம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த செந்தில் பாலாஜி நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சிறைக்குச் சென்ற செந்தில் பாலாஜியை சிறைத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மேலும், சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் தனியறையில் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருக்கிறார். சிறை மருத்துவர்களின் அறிவுரைக்கேற்ப அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஏ வகுப்பு தனிச் சிறை அறைக்கு அவர் மாற்றப்படுவார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதால் தற்போது அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.

புழல் சிறை

சிறையில் செந்தில் பாலாஜிக்கு என்னென்ன வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “செந்தில் பாலாஜி சிறைக்கு வருவதற்கு முன்பாகவே அவருக்குத் தேவையான கட்டில், தலையணை, கொசுவலை என அனைத்தும் புதிதாக வாங்கிவைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அவர் சிறை மருத்துவமனையில் இருக்கிறார். நேற்றிரவு சப்பாத்தி சாப்பிட்டார். அவர் அறைக்கு அருகிலேயே மருத்துவர்கள் அறை இருக்கிறது. மேலும், அந்த அறை ஏ.சி வசதி கொண்டது. இங்குக் கண்காணிப்பு முடிந்ததும், அவர் தனியறைக்கு மாற்றப்படுவார்” என்றார்கள்.

from Tamilnadu News https://ift.tt/kqzmnJO