புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமலாக்கத்துறையினர் அமைச்சர்கள் மீது சோதனை நடத்துவதை, எதிர்க்கட்சிகள் மீது ஏவும் ஆயுதமாகவே நான் பார்க்கிறேன். இப்படிப்பட்ட ஒரு துறை தேவை இல்லை என்பது தான் என் கருத்து. அவர்களது பணி பண பரிமாற்றத்தை அறிந்து நடவடிக்கை எடுப்பது, வழக்கு போடுவது கிடையாது. பா.ஜ.க தங்களை யார் எல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் மீது பொய் வழக்குகளை போடுகின்றனர். குறிப்பாக, அவர்கள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து தான் இந்த சோதனைகளை நடத்துகின்றனர்.

குறிப்பாக, பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் எல்லாம் புனிதமானவர்கள், சேராதவர்கள் புனிதமற்றவர்களாகின்றனர். தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அனைத்து இடங்களையும் பிடிக்கும். பா.ஜ.க மக்கள் மனதில் இடம் பிடித்துவிடலாம் என்று எண்ணுகிறது. ஆனால், அது பகல் கனவு அது முடியாது. சந்திரயான் 3 விண்ணுக்கு அனுப்பியது என்பது விஞ்ஞானிகளுக்கு கிடைத்த வெற்றி. ஆனாலும், இதே இந்தியாவில் கழிவுநீர் வாய்க்காலில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் வலுவான கூட்டணிக்காக 26 கட்சிகளை பேசி முடித்துள்ளோம்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/H6OmJ32
