எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.

அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துவரும் நிலையில், கடைமடை பகுதி வரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். கர்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டூவின் குறுக்கே அணை கட்டுவது, நிலுவையில் உள்ள காவிரி நீரை வழங்க மறுப்பது போன்ற சூழ்நிலையில் அங்கு நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டது முறையான செயல் அல்ல.
காவிரியில் திறந்து விட வேண்டிய நீர் மற்றும் மேக்கேதாட்டூ அணை விவகாரம் குறித்து அந்த மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தமிழக முதலமைச்சர் தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவர் அதைப் பற்றி கோரிக்கை வைக்க மாட்டேன் என பேட்டியில் முன்கூட்டியே கூறியது, தமிழக மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கர்நாடகா செல்லும்போதெல்லாம் தமிழகத்தின் கோரிக்கை குறித்து தெளிவுபடுத்தி வந்தனர்.
ஆனால், தாங்கள் செய்கின்ற தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இது போன்ற கூட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. மேக்கேதாட்டூவில் அணை கட்ட முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோதே நாடாளுமன்றத்தில் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழக பி.ஜே.பி-யும் அதனை எதிர்த்தது. வருகின்ற 23-ம் தேதி தமிழக முழுவதும் ஊழல் தி.மு.க அரசு மற்றும் ஊழல் தி.மு.க அமைச்சர்களை கண்டித்தும் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டியும், ஊராட்சிகள், நகராட்சிகள் வார்டுகள் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக வரலாற்றில் வார்டுகள் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
அமலாக்கத்துறை மற்றும் ஆளுநர் ஆகியோரின் செயல்பாடுகள் மறைமுகமாக தி.மு.க-வுக்கு பிரசாரமாக அமையும் என தமிழக முதல்வர் கூறியுள்ளதை பொதுமக்கள் உள்பட யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அமைச்சர்கள்மீது தவறு இருந்து சிறைச்சாலை வரை சென்று அவர்கள் அடைக்கப்பட்ட நிலையிலும் அவர்களை அமைச்சராக நீடிக்க செய்வது அரசியல் மாண்பு இல்லை.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளிநாடு சென்று வந்தது, அமலாக்கத்துறையின் தொடர் சோதனைகள் போன்றவற்றின் தொடர்ச்சியாக பல ஊழல்கள் வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி போன்ற ஊழல் வாதிகளை கொண்ட தி.மு.க-வினர் ஊழல் குறித்து பேச தகுதி இல்லை. அ.தி.மு.க உள்ளிட்ட 30 கட்சிகளோடு பா.ஜ.க கூட்டணி பலமாக உள்ளது. நாங்கள் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்பதை அறிவித்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூட கூற முடியாத நிலையில் உள்ளனர்.
தி.மு.க மட்டுமல்லாது, அ.தி.மு.க அமைச்சர்கள் மீதும் உள்ள வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. எந்த அரசியல் ஆதாயத்திற்காகவும், எந்த வழக்குகளையும் பா.ஜ.க இதுவரை வாபஸ் பெறவில்லை. பா.ஜ.க மத்திய அமைச்சர்கள்மீது எந்தவிதமான குற்ற முகாந்திரமும் இல்லை என வழக்குகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காக அவர்கள்மீது பொய்யான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/fShXLMC
