மும்பையில் நேற்று மாலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலிருந்து மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதோடு, வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதோடு பலத்தக் காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் ஒடிந்து விழுந்தது. சயான் கோலிவாடாவில் கார்கள் மீது மரம் ஒன்று ஒடிந்து விழுந்தன. மும்பை உட்பட முக்கிய இடங்களில் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். கல்யான், டோம்பிவலி, உல்லாஸ்நகர், அம்பர்நாத் பகுதிகளில் இன்று முழுவதும் கனமழை பெய்தது. நவிமும்பை பேலாப்பூர் பஸ் டெப்போ முழுக்க மழை நீர் தேங்கியதால், பேருந்துகளை நிறுத்த முடியவில்லை.

தானேயில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் 250 குடும்பங்களும், பத்லாப்பூரில் 200 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தானே மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மும்பை முழுக்க ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால், தாக்குர்லி – கல்யான் இடையே புறநகர் ரயில் போக்குவரத்து தடைபட்டது.
உடனே பயணிகள் ரயிலிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தனர். அந்நேரம் ஒருவர் கையில் 4 மாதக் குழந்தையுடன் இறங்கியபோது, தவறுதலாக குழந்தையை சாக்கடைக்குள் விட்டுவிட்டார். தண்ணீர் குழந்தையை அடித்துச்சென்றுவிட்டது. தீயணைப்புத்துறையினர் குழந்தையைத் தேடி வருகின்றனர். அம்பர்நாத் – பத்லாப்பூர் இடையே ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் தென்னிந்தியா மற்றும் புனே செல்லும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகமான ரயில்கள் திவா-பன்வெல் வழியாக திருப்பிவிடப்பட்டன.

சில ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பிவாண்டியில் 14 வயது பெண் ஒருவர் சாக்கடையில் அடித்துச் செல்லப்பட்டார். இரவு முழுவதும் பெய்த மழையால் ரத்னகிரி, ராய்கட் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மழை குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மும்பையில் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
from Tamilnadu News https://ift.tt/IwFjtYK
