கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த 18-ம் தேதி அதிகாலை உடல்நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் புதுப்பள்ளிக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இன்று புதுப்பள்ளியில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் உம்மன் சாண்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கோட்டயம் புதுப்பள்ளியில் உள்ள புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் சர்ச்சில் இன்று மாலை 3.30 மணியளவில் அவரின் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. இதை முன்னிட்டு கோட்டயம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுமுறை முதல்வராகவும், மூன்றுமுறை அமைச்சராகவும், 53 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-வாகவும் இருந்த உம்மன் சாண்டியின் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
அதே சமயம் உம்மன் சாண்டியின் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அறிவித்திருந்தார். ஆனால், அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கு தனக்கு வேண்டாம் என உம்மன் சாண்டி ஏற்கனவே கூறியிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அரசு மரியாதை வேண்டாம் எனவும் மத அடிப்படையிலான சடங்குகளுடன் தனது இறுதிச்சடங்கை நடத்த வேண்டும் எனவும் உம்மன் சாண்டி விரும்பியதாக அவரின் மனைவி மரியம்மா உம்மன் பொது நிர்வாகத்துறைக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அரசு மரியாதை இல்லாமல் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் கூறுகையில், “சாதாரண மனிதனாக பிறந்து, சாதாரண மனிதராக வாழ்ந்த ஒரு தலைவருக்கு மக்கள் வழங்கும் அன்பான ஆதரவை வழிநெடுக பார்த்தோம். அப்பாவின் ஆசைப்படி அவரின் இறுத்திச்சடங்கை நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார். “அப்பா மக்களுக்கு அளித்த அன்பை மக்கள் திருப்பிக்கொடுப்பதை காண்கிறேன்” என உம்மன் சாண்டியின் மகள் அச்சு உம்மன் தெரிவித்துள்ளார்.
from Tamilnadu News https://ift.tt/IODX79n
