நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆளும் பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இரண்டாம் முறையாக நடந்து முடிந்திருக்கிறது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாஜக அரசை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைத்து பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். அந்தக் கூட்டத்தில் 18 கட்சிகள் கலந்துகொண்டன.

இதையடுத்து சமீபத்தில் காங்கிரஸ் தலைமையில், இரண்டாவது முறையாக எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் பெங்களூரில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. அதேசமயம், கடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சோனியா காந்தி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முன்னதாக பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் கலந்துகொண்ட கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தால் மட்டுமே இரண்டாம் கட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்த வேளையில் கடந்த ஞாயிறன்று காங்கிரஸ் கட்சி, டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி 2-வது எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதாகத் தெரிவித்தது. இப்படியாக சமரசம் ஏற்பட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருபுறம் பெங்களூரில் கூட்டம் நடத்த, இன்னொருபுறம் ஆளும் பாஜக அரசும் தனது கூட்டணிக் கட்சிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தியிருக்கிறது.

இவ்வாறாக நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆளும் தரப்பும், எதிர்த் தரப்பும் ஆயத்தமாகிவரும் நிலையில், எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அந்தமான் நிக்கோபாரிலுள்ள சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் ஒன்றை காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த பிறகு பேசிய மோடி, “ஊழலை முன்னிலைப்படுத்திய எதிர்க்கட்சிகள் பெங்களூரில்ல் ஒன்று கூடியிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். 2024 -ல் பா.ஜ.க ஆட்சியை மீண்டும் கொண்டுவர மக்கள் முடிவு செய்துவிட்டனர். மக்களின் பிரச்னைக்குக் காரணமானவர்களே மக்களிடம் கடையைத் திறந்திருக்கின்றனர். 26 அரசியல் கட்சிகளுக்கு இது பொருந்தும். அவர்களிடம் சாதிவெறிக்கும் ஊழலுக்கும் உத்தரவாதம் உண்டு. அவர்கள் பெங்களூரில் கூடியிருக்கின்றனர். கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்களுக்கு அந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜாமீனில் இருக்கும் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய கெளரவம் அளிக்கப்படுகிறது. ஒரு சமுதாயத்தினரை அவமதித்ததற்காக சிறைத் தண்டனை பெற்றவர்கள் கெளரவிக்கப்படுகின்றனர்.
ஜனநாயகம், மக்களால், மக்களுக்காக மக்களே தேர்வு செய்யப்படுவதே ஆகும். ஆனால், வாரிசு அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை அது குடும்பத்தினரால், குடும்பத்தினருக்காக, குடும்பத்தினரே தேர்வுசெய்யப்படுவதாக மாறியிருக்கிறது. அவர்களுக்குக் குடும்பமே முக்கியம். நாட்டைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. அதுதான் அவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. வெறுப்பு, ஊழல் அரசியல் செய்கின்றனர். வாரிசு அரசியலுக்கு நாடு பலியாகிவிட்டது. அவர்களைப் பொறுத்தவரை, குடும்பத்தினரின் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றனர். ஏழைகளைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. நாட்டுக்கு பதில் குடும்பத்தினருக்கே எதிர்க்கட்சிகள் முக்கியத்துவம் அளிக்கின்றன.

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேசவில்லை. சுயநலத்துக்காகத் தொண்டர்களை சோனியா குடும்பத்தினர் கைவிட்டுவிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் கட்சியினரை மறந்துவிட்டனர். அதேபோல், தமிழகத்திலிருந்து (தி.மு.க) இப்போது பல்வேறு ஊழல்கள் வெளிவருகின்றன. அவர்களுக்கும் இவர்கள் நற்சான்றிதழ் அளிக்கிறார்கள், அவர்களை குற்றமற்றவர்கள் என்கிறார்கள்” என்று வெளிப்படையாக எதிர்க்கட்சிகளையும், மறைமுகமாக தி.மு.க-வையும் சாடியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த விமர்சனம் குறித்து நம்மிடம் பேசிய, காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளரும், மாநில செய்தித் தொடர்பாளருமான ஜி.கே.முரளிதரன், “இந்தப் பக்கம் எடப்பாடியையும், அந்தப் பக்கம் நட்டாவையும் வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது… கொரோனோ என்கிற கொடுமையான காலத்தில் ‘பிரைம் மினிஸ்டர் கேர்’ என்று சொல்லி வசூலித்த லட்சக்கணக்கான கோடி பணத்துக்கு எந்தக் கணக்கும் கேட்கக் கூடாது என்பதற்காக சட்டத் திருத்தத்தையே கொண்டு வந்து, அந்தப் பணத்தை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மோடிக்கு அரசியல் கட்சிக்காரர்கள் பற்றிப் பேசுவதற்கு எந்த யோகியதையும் கிடையாது.

மக்களுக்காகத் தொண்டு செய்யும் கூட்டம்தான் பெங்களூரில் கூடியது. மக்கள் இன்றும் அவர்கள்மீதுதான் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மற்ற கட்சியிகளிருந்து எம்.எல்.ஏ-க்களை மோசடி செய்து தங்கள் பக்கம் இழுத்துத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியமைத்தது பாஜக. ஆனால், அதையெல்லாம் முறியடித்து இன்று எல்லாப் பக்கமும் பாஜக துடைத்து எறியப்பட்டு மாநிலக் கட்சிகள் ஆட்சி அமைத்துவருகின்றன. பெங்களூரில் கூடிய கூட்டணியான INDIA-தான் வெற்றிபெறும். அதில் எந்தவித மாறுபாடும் கிடையாது. ஏனென்றால், INDIA என்கிற அழகான பெயரை எதிர்த்து இந்தியக் குடிமக்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள். அதனால் நிச்சயமாக மோடி தோற்பது உறுதி. இதனால்தான் தனது அச்சத்தின் வெளிபாடாக சில விஷயங்களை உளறிக்கொண்டிருக்கிறார் மோடி” என்றார் காட்டமாக.
“குற்றச்சாட்டுக்கு எப்போதுமே பதில் சொல்வதில்லை இந்த ஊழல் கட்சிகள். குறிப்பாக திமுக, காங்கிரஸ். ஏனென்றால் இவர்களால் பதில் சொல்ல முடியாது. அதை மடைமாற்றும் வேலையைத்தான் தொடர்ந்து செய்துவருகிறார்கள்” என்கிறார் பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். மேலும் தொடர்ந்தவர், “பாஜக-வின் எந்த மாநில முதலமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் கிடையாது. ஆனால், பாஜக-வுக்கு எதிராக இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அது தொடர்பான வழக்குகளும் நடக்கின்றன. இதனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஓர் அணியைத் திரட்டுகிறார்கள். அதற்கு ஒரு பெயர் கொடுக்கிறார்கள். அதுவும் INDIA என்கிறார்கள்.

ஏற்கெனவே பிரபலமான ஒரு பெயரைப் பயன்படுத்தித்தான் தங்களது இருப்பைக் காட்டி கொள்ள வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறார்கள். ஏனென்றால், ஒரே ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள், ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே செல்வாக்கோடு இருப்பவர்கள், தன்னுடைய மாநில எல்லைக்கு வெளியே ஒரு செல்வாக்கும் இல்லாதவர்கள், தன்னுடைய மாநிலம் தாண்டி தனது கட்சியைப் பற்றித் தெரியாதவர்கள்… இது மட்டுமல்லாமல் பிரதமர் வேட்பாளருக்குக்கூட வேட்பாளரே இல்லாதவர்கள், அப்படி அறிவித்தாலும் அதற்கு ஒற்றுமையில்லாதவர்கள்… இப்படியிருக்க காலாவதியான காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றுப் பெயர் வைத்ததிலிருந்தே அவர்கள் தோல்வி ஆரம்பமாகியிருக்கிறது. இது தொடரும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/erInNyT
