‘பிரதமரே… மணிப்பூர் பற்றியெரிகிறது. உடனே அங்கு செல்லுங்கள்’ என்று எதிர்க் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பதைபதைப்புடன் சொன்னார்கள். ஆனால், கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் படு பிஸியாக இருந்தார் பிரதமர் மோடி. ஒரு மாநிலமே வன்முறையில் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அங்கு உடடினயாக சென்றிருக்க வேண்டியவர் மத்திய உள்துறை அமித் ஷா. ஆனால், அவரும் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்தார்.
‘பிரதமரே.. மணிப்பூரில் ஒரு மாதத்துக்கு மேலாக வன்முறை தாண்டவமாடுகிறது. அது பற்றி பேசாமல் ஏன் வாய்திறக்காமல் இருக்கிறீர்கள்?’ என்று எதிர்க் கட்சியினர் உட்பட எல்லோரும் அலறினார்கள். டெல்லியில் பிஸியாக இருந்த பிரதமருக்கு மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல்கள் கேட்கவில்லை போலும். அதனால், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மூச்சுவிடவே இல்லை.
மணிப்பூரில் இரு இனத்தவருக்கு இடையே கடந்த மே 4-ம் தேதி மோதல் வெடித்து, இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரச்னை நீடித்துவருகிறது. இந்த காலக்கட்டத்தில், ஏராளமான தேவாலயங்களும் கோயில்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளும் கடைகளையும் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைத்து கொளுத்தப்பட்டும் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இரு தரப்பினரிடையிலான மோதல்களில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் என உலகையே சுற்றிவந்திருக்கிறார் பிரதமர் மோடி. அதனால், மணிப்பூர் பற்றி யோசிக்க அவருக்கு நேரமில்லை என சாடின எதிர்க்கட்சிகள். ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் இப்போது அவர் மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.
மணிப்பூரில் குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி, சாலையில் ஊர்லமாக இழுத்துச்செல்லும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில்தான், முதன்முதலாக மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி வாய்திறந்திருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 20) தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “மணிப்பூர் சம்பவம் பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதில் எந்தக் குற்றவாளியும் தப்ப மாட்டார்கள் என்று இந்த நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன். சட்டம் தன் முழு வலிமையுடன் முடிவெடுக்கும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். மேலும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்த அனைத்து மாநில முதல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

‘38 கட்சிகளுடன் பேச நேரமுள்ளது. ஆனால், மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லை’ என்று விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. மணிப்பூரில் நடந்த கொடுமைக்காக பிரதமர் வெட்கப்பட வேண்டும் என்று கொந்தளித்திருக்கிறார் சி.பி.எம் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத். ‘வன்முறை குறித்து உச்ச நீதிமன்றம் கண்டனத்தை பதிவுசெய்த பிறகே, இந்த விவகாரம் குறித்து மோடி வாய்திறந்திருக்கிறார்’ என்கிறார் கபில் சிபல் எம்.பி. நாள் முழுவதும் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியிருக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் கவிதா முரளிதரனிடம் பேசினோம். “மணிப்பூரில் இரண்டு பழங்குடிப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம், கடந்த மே மாதம் நடந்ததாகச் சொல்கிறார்கள். அந்த மாநிலத்தில் இணைய சேவை முடக்கப்பட்டிருந்ததால், உடனடியாக அது வெளியே தெரியாமல் போனது. அந்த கொடுமை வெளியே தெரிந்த பிறகு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ஒருவேளை, அது வெளியே தெரியவந்திருக்காவிட்டால், எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள். அவ்வளவு பெரிய சம்பவம் நடந்தது, அப்போதே அரசுக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்பே இல்லை. அப்போதே ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

மணிப்பூரில் ஏராளமான பெண்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களை ஒடுக்குவதற்காக, பாலியல் வன்கொடுமை என்ற உத்தியை வன்முறையாளர்கள் கையாண்டிருக்கிறார்கள். கலவரங்களின்போது, பெண்களை பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்வது என்பது ஒரு பேட்டர்ன் ஆகவே நடக்கிறது. குஜராத், முசாஃபராபாத் என எல்லா இடங்களிலும் இதுதான் நடந்தது.
ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு குழு… அது சாதியவாத குழுவாக இருக்கலாம், மதவாதக் குழுவாக இருக்கலாம், இனவாத குழுவாக இருக்கலாம். பெரும்பான்மை, சிறுபான்மை என்று வரக்கூடிய பிரச்னைகளில் பெரும்பான்மையினர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் முறையைக் கையாளுகிறார்கள். மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து வெளியிடுவதன் மூலமாக தங்களின் அதிகாரத்தைக் காட்ட முயல்கிறார்கள். அதிகாரத்தை நிலைநிறுத்தும் ஒரு விஷயமாக அதை அவர்கள் பார்க்கிறார்கள்.
மணிப்பூர் சம்பவத்தை தனிப்பட்ட ஒரு பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற பிரச்னைகள் பற்றி பேசப்படுவதே இல்லை. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் பெண்களுக்கு எதிரான நடந்த வன்முறைகள் இன்றுவரை விவாதப்பொருளாக மாறவில்லை. மணிப்பூரைத் தாண்டிய ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், இந்த வீடியோ வெளியான பிறகுதான் அது பற்றி பரபரப்பாகப் பேசுகிறார்கள். எனவே, நம்முடைய மௌனத்தைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய நேரமாக இதைப் பார்க்கிறேன்.
மணிப்பூர் பற்றியெரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் உலகமெல்லாம் சுற்றிவருகிறார். அதற்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்கிறது. வீடியோ வெளியாகி நாடே கொந்தளித்த பிறகுதான், மணிப்பூர் பற்றி அவர் வாய்திறந்து பேசியிருக்கிறார். ‘இதயம் கனத்திருக்கிறது’ என்று பிரதமர் சொல்கிறார். எந்த அதிகாரமும் இல்லாத சாதாரண மக்கள் அப்படிச் சொல்லாம். ஆனால், சர்வ அதிகாரம் படைத்த, நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை வகிக்கும் பிரதமர், ஒரு சமானியரைப் போல பேசிக்கொண்டிருக்கிறார்.

மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், வீடுகளிலிருந்து துரத்திடியக்கப்பட்ட சுமார் 50,000 மக்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்பவில்லையே. இரண்டு மாதங்களாக பிரச்னை நீடித்துவரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று திரும்பத் திரும்ப சொல்லிவருகிறார்கள். உண்மையிலேயே உரிய நடவடிக்கை அவர் எடுத்திருந்தால் வன்முறை எப்போதுமே கட்டுக்குள் வந்திருக்குமே” என்கிறார் கவிதா முரளிதரன்.
`டபுள் இன்ஜின் சர்க்கார்’ (மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி) அமைந்துவிட்டால், எந்த சிக்கலும் இல்லை என பிரசார மேடைதோறும் பேசி வந்தார் மோடி. மணிப்பூரில் `டபுள் இன்ஜின் சர்க்கார்’ இருந்தும், ஏன் இவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன? இதற்கு பதில் சொல்வாரா பிரதமர்?!
from Tamilnadu News https://ift.tt/Vxhyzqv
