‘மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் கலைப்பாரா?’ என்ற கேள்வி கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவெங்கும் எதிரொலித்தது. ‘மணிப்பூர் பற்றி பேசுங்கள்’ என்கிற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலையும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் இருந்த பிரதமர், இப்போது மணிப்பூர் பற்றி பேசியிருக்கிறார்.

மணிப்பூர் வன்முறை – அமித் ஷா, மோடி

வெறிபிடித்த ஒரு கும்பலால் ‘மணிப்பூர் மகள்கள்’ நிர்வாணமாக ரோட்டில் இழுத்துவரப்பட்ட வீடியோ வெளியான பிறகு, அதைக் கண்டு ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்த பிறகு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகு… இவ்வளவு ‘பிறகு’களுக்குப் பிறகுதான், தனது மௌனத்தைக் கலைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

‘மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் பிரதமர் மோடி. அதாவது, அன்றைய தினம்தான் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. அப்படியிருக்கும்போது, இந்தக் கருத்தை அவர் நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும்.

பிரதமர் மோடி

ஆனால், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது என்றல்லாமல் ‘ஒருவழிப் பாதை’யில் பேசியிருக்கிறார். அதை, மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ பேசியிருந்தால் அவருடைய கருத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். எப்படியோ, அவர் தனது மௌனத்தைக் கலைத்துவிட்டார். இனியாவது மணிப்பூரை அவர் காப்பாற்றுவாரா என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள்.

மணிப்பூரைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அங்கு தற்போதிருக்கும் பிரேன் சிங் ஆட்சியை வைத்துக்கொண்டு அந்த மாநிலத்தை நிச்சயம் காப்பாற்ற முடியாது. ஏனென்றால், இரண்டு பழங்குடிப் பெண்கள் மே 4-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அது குறித்து, மே 18-ம் தேதிதான் முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஜூலை 19-ம் தேதி அந்த வீடியோ வெளிவரும் வரையில், குற்றவாளிகளில் ஒருவர்கூட கைதுசெய்யப்படவில்லை. அப்படியென்றால், குற்றவாளிகளை மாநில அரசு பாதுகாக்கிறதா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

அந்த வகையில் பார்த்தால், மணிப்பூர் முதல்வர் பதவியிலிருந்து பிரேன் சிங்கை உடடினயாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் எழுப்புகிறார்கள். ஆனால், அத்தகைய நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொள்வாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை, பிரேன் சிங்கை பதவியிலிருந்து நீக்கினால், அங்கு நிகழ்ந்த வன்முறைகளுக்கு மாநில பா.ஜ.க அரசு உடந்தையாக இருந்தது, அல்லது, அந்த வன்முறைகளைக் கண்டுகொள்ளாமல், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தது என்பதை ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, முதல்வரைப் பதவியிலிருந்து நீக்குவது சந்தேகம்தான்.

ஆனாலும், ஏதோவொரு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தே ஆக வேண்டும். ஏனென்றால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது ‘மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், உச்ச நீதிமன்றம் தலையிடும்’ என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவில் கூறியிருக்கிறார்.

இன்னொருபுறம், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்துவருகின்றன. மேலும், டபுள் இன்ஜின் சர்க்கார் இருக்கும் மாநிலத்திலேயே இவ்வளவு மோசமான கொடூரம் நிகழ்ந்திருக்கிறதே…. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடியிருக்கிறார்களே என்கிற எண்ணத்தை நாடு முழுவதும் அந்த வீடியோ ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய நெருக்கடிகளால், பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

தலைமை நீதிபதி சந்திரசூட்

மணிப்பூரைக் காப்பாற்றியாக வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்த விவகாரத்தைப் பொறுத்தளவில், இது கைமீறிப்போய்விட்ட ஒன்றாக இருக்கிறது. முதலில், ஆட்சியாளர்கள்மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்கான வேலையை அரசு முதலில் செய்ய வேண்டும். அதே நேரத்தில், குற்றமிழைப்பவர்கள், குற்றத்துக்கு துணைபுரிபவர்கள் என யாராக இருந்தாலும், மிக உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அதற்கு பிரதமர் தயாரா என்பதுதான் தற்போதைய கேள்வி!!!

from Tamilnadu News https://ift.tt/xELdB6Y