தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பொன்முடி, ஆளுநர் ரவி

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டின் பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும். ஒரு கல்லூரியிலிருந்து மற்றொரு கல்லூரிக்கும் மாறும் மாணவர்கள் மற்றும் பேராசியர்களுக்கு உதவியாக இருக்கும்.

பொதுப் பாடத்திட்டத்தில் எந்தத் தவறும் கிடையாது. எனவே, தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை விரைவில் அமலுக்கு வரும். புதிய கல்விக்கொள்கையில் இருக்கும் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்வோம். கல்லூரியில் காலியாக இருக்கும் உதவிப் பேராசியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். கல்வித் தரத்தை உயர்த்த துறை முதன்மைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும். உயர் கல்வித்துறையில் எனது செயல்பாடுகளை முடக்க அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதா எனக் கேட்கிறீர்கள்.

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை ரெய்டு

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ சொல்லிக்கொள்ளுங்கள். இது போன்ற சோதனைகளை எல்லாம் நாங்கள் பார்க்காதவர்கள் அல்ல. இது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினே சட்ட ரீதியாக இந்தச் சூழலை எதிர்கொள்வோம் என சொல்லிருக்கிறார். அதனால் எதையும் சட்ட ரீதியாக சந்திப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 18-ம் தேதி அமைச்சர் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக அன்று நடைபெற்ற திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை. ஆளுநர் ரவி மட்டும் கலந்துக்கொண்டு பட்டங்களை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

from Tamilnadu News https://ift.tt/A4iIfLz