தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பின் நடந்த அமைச்சரவைக் கூட்டம் என்பதால் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை கூட்டம், கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் நீடித்தது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாகப் பெரியளவில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உயர்த்தப்படும் உதவித் தொகைகள்!
மேலும் முதியோர், ஆதரவற்றோர், கைம்பெண் உதவித்தொகை ரூ.1200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

உரிமைத் தொகை முகாம் தொடக்கம்!
மகளிர் சுய உதவிக் குழுக்களை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தருமபுரியில் தொடங்கினார். அதுபோல், பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய திட்டமாக இருக்கும் மகளிர் உரிமைதொகை திட்டத்தின் முகாமை தருமபுரியில் வரும் 24-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதை முறையாகக் கண்காணிக்க அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படுவது என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

முதலீடு ஈர்க்க திட்டம்!
தமிழக பொருளாதாரத்தை வரும் 2030-ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், சிங்கப்பூர், ஜப்பான் நிறுவனங்களின் தொழில் முதலீட்டை ஈர்க்க தமிழக்கத்தின் முதலமைச்சர், தொழில்துறை அமைச்சர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில் முக்கியமான ஒப்பந்தங்களும் கையெழுத்தானதாக சொல்லப்பட்டது. அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்கள் அதை விரிவுப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர். அது தொடர்பாகவும், மேலும் முதலீட்டு மாநாட்டுக்கு அழைக்க வேண்டிய நிறுவனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், திமுக அமைச்சர்கள் மீது அடுத்தடுத்த தொடுக்கப்பட்ட அமலாக்கத்துறை ரெய்டு குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.!
from Tamilnadu News https://ift.tt/u2Sao37
