`கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ உட்பட பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவாக முதியோர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டுவந்த உதவித்தொகையை ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விதமான சமூகப் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியங்களைப் பெற்றுவருகிறார்கள். இவர்களுக்கு உதவி செய்யும் விதமாகத்தான் மாதம் ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக வழங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

காத்திருப்போர் பட்டியலில் 74 லட்சம் பேர் இருக்கிறார்கள். மொத்தமுள்ள பயனாளிகள் மூலம் ரூ.845.91 கோடி அரசுக்கு செலவினம் ஏற்படும். `கலைஞர் உரிமைத்தொகை திட்டம்’ தொடர்பாகத் திங்கள்கிழமை முதல் மூன்று கட்டங்களாக முகாம்கள் நடத்தப்படவிருக்கின்றன. மொத்தமாக 35,925 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடக்கவிருக்கின்றன. டோக்கன் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மணிப்பூர் விவகாரத்தில் தி.மு.க தன்னுடைய தெளிவான கருத்தைத் தெரிவித்திருக்கிறது. முதலமைச்சர் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும், பெண்களின் பாதுகாப்பில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டித்திருக்கும்போது, அ.தி.மு.க இந்த விவகாரத்தில் இதுவரை மௌனமாக இருப்பது ஏன்… `யாருக்கும் நாங்கள் அடிமையில்லை’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் இதுவரை அவரிடமிருந்து ஒரு வார்த்தைக்கூட வராததைப் பார்க்கும்போது அ.தி.மு.க-வின் இந்த இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது. இதைக் கண்டிப்பதற்குக்கூட எதிர்வராத சக்திகள் இன்னும் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வெட்கக்கேடு” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/wAiDGVt