நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், “மக்களோடு மய்யம்” என்ற ஒரு நிகழ்வை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர். இதில் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் அறிந்து அவற்றை வாக்குறுதியாக அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். கோவையில் ஏற்கெனவே கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு தெரிவித்திருக்கிறார்.

கமல்

இதற்கு முன்னர், கோவை தெற்கு தொகுதியில், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வானதி சீனிவாசனும் தனது தொகுதியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிகளை பட்டியலிட்டார். அப்போது, அந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் சிநேகன், “கமல்ஹாசன் போட்டியிட்ட தொகுதி என்பதால் மட்டும் இங்கு போராட்டம் தொடங்கவில்லை தேர்தல் நேரத்தில் உற்று கவனிக்கப்பட்ட ஒரு தொகுதி என்பதால் தொடங்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவாரா? கூட்டணி உள்ளதா? என்பது குறித்து முடிவு எடுக்க இன்னும் காலம் உள்ளது. அது குறித்து கூடிய விரைவில் அறிவிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் தொடர்வார். அதிமுக, பாஜக-வின் கோட்டை எனப்படும் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான வெற்றியை ஈட்டி கொடுத்தார். இப்போது அவர் அமலாக்கத்துறை வசம் சிக்கி இருப்பதால் அவரால் வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.

கமல்ஹாசன் – ராகுல் காந்தி

ஒருவேளை அப்படி அவர் வந்தாலும் பொருளாதார ரீதியாக பழையபடி கோலோச்ச முடியுமா என்பதும் இருக்கிறது. ஏனென்றால் அமலாக்கத்துறையின் இப்போதைய இந்த நகர்வுகள் யார் யார் எல்லாம் திமுக-வின் மணி பேங்கிங்காக இருக்கிறார்களோ அவர்களை மையமிட்டே குறி வைத்து வருகிறார்கள். காரணம் தேர்தலுக்கு தேர்தல் பணம் கொடுத்து வாக்காளர்களை கவர்கிறார்கள். இந்த முறை அது நடந்துவிட கூடாது என்பதற்காக திமுக-வின் மணி ஃபுளோவை துண்டிக்கிறார்கள். எனவே இந்த நேரத்தில் ஏற்கனவே கோவையில் நன்கு அறிமுகமான கமல்ஹாசனை திமுக கூட்டணி களமிறக்க முன் வருவார்கள்” என்கிறார்கள் தமிழக அரசியலை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடபாளர் முரளி அப்பாஸ் , “கோவையில்தான் நிற்க போகிறார் என்பதற்கான திட்டமில்லை. ஆனால், அதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதுதான் உண்மை. நற்பணி இயக்கம் முதல் மாநாடே கோவையில் தான் நடந்தது. அதனால் தலைவருக்கு கோவை எப்போதும் நெருக்கமான ஓர் உணர்வு உண்டு. தற்செயலாக கோவையில் ஒரு துணை தலைவர், மூன்று நான்கு மாநில செயலாளர்கள் இருக்கிறார்கள். அதனால் அங்கு ஆர்வமாக செயல்படுவதற்கு, கீழ் இருப்பவர்களை முனைப்பாக செயல்பட வைப்பதற்கு டீம் நிறைய இருக்கிறது. அதனால அடுத்தடுத்து அங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

முரளி அப்பாஸ்

அதேநேரத்தில் மதுரை, தென் சென்னை கவனித்தாலும் தெரியும். இங்கேயும் வேலைகள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். மொத்தத்தில், சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இந்த மூன்று தொகுதியிலும் நூறு சதவீதம் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அதை நான் வந்து பார்வையிடுவேன் என்று அமெரிக்க போவதற்கு முன் சொல்லியிருக்கிறார்” என்றவர், கூட்டணி குறித்தும் பகிர்ந்து கொண்டார். அதன்படி, “நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி இன்னும் உறுதிகாவில்லை. அது குறித்தும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி வர வேண்டும், காங்கிரசுக்கு ஆதரவு இருக்கிறதே தவிர அதிகாரப்பூர்வமாக இன்னும் கூட்டணியில் இணையவில்லை. அதனால்தான் பெங்களூருக்கு கூட போகவில்லை. எங்களின் கூட்டணி குறித்து அடுத்த நகர்வு என்பது தேர்தல் அருகாமையில்தான் தெரியும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/Y68RTAj