மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களைக் கடந்தும், தொடர்ந்துகொண்டிருக்கும் கலவரம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. மணிப்பூர் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. இந்த நிலையில், மணிப்பூர் பா.ஜ.க எம்.எல்.ஏ பாவோலியன்லால் ஹாக்கிப் (Paolienlal Haokip) மணிப்பூரில் நடக்கும் இந்தக் கலவரத்துக்கு மணிப்பூரில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசுதான் காரணம் என `அதிர்ச்சி’ கிளப்பியிருக்கிறார்.

பிரேன் சிங்

இது தொடர்பாக இந்தியா டுடே பத்திரிகையில் பாவோலியன்லால் ஹாக்கிப், பத்தி எழுதியிருந்தார். அதில், “மணிப்பூரில் மே 3-ம் தேதி தொடங்கிய தவிர்க்கப்படக்கூடிய இந்தக் கலவரம், அரசு உடந்தையாக இருப்பதால்தான் இத்தனை நாள்களாகத் தொடர்கிறது. கலவரம் நடந்துகொண்டிருக்கும்போது மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், ‘நார்கோ பயங்கரவாதிகளுக்கு எதிரான அரசின் போர் இது’ எனச் சித்திரித்தார். இதிலிருந்து இந்தக் கலவரத்துக்கு அரசும் உடந்தையாக இருப்பதைத் தெளிவாகக் கண்டறிய முடிகிறது.

அதனால், இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியிருக்கும் மலையடிவாரத்தில் வசிக்கும் குக்கி சமூக மக்களின் குடியிருப்புகளைத் தாக்கி எரிக்கவும், மைதேயி குழு அரசுப் படைகளைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் நோக்கில் குக்கி மக்களை நார்கோ பயங்கரவாதிகளுடன் முதல்வர் ஒப்புமைப்படுத்தியிருக்கிறார். பல குக்கித் தலைவர்களின் மலைப் பகுதிக் குழுவின் அதிகாரங்களை முடக்குதல், அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டை, உரிய பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது தொடர்பான அரசின் தொடர் செயல்பாடுகளால் இந்த இன வன்முறை தொடங்கியிருக்கிறது.

மணிப்பூர்

எனவே, இதைப் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான விடுதலைப் போராகவும், பழங்குடியின மக்களின் நிலத்தை, உரிமையைப் பறிக்க முயலும் மைதேயி இன மக்களின் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் எந்த ஒரு சார்பும் இன்றி, அரசு நிர்வாகத்தால் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், அனைத்து சமூகங்களுக்கிடையே அரசு நடுநிலையாக இருந்திருந்தால்… இந்தப் பெரும் உயிர்ச்சேத வன்முறை மோதலைத் தவிர்க்கலாம்.

எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், ஒரு சார்பாகச் செயல்படுவது அமைதிக்குத் தீங்கு விளைவிக்கும். கடந்த காலங்களிலும் மணிப்பூரில் இது போன்ற சார்பு நிலைகள் இருந்தபோதிலும், தற்போதைய முதலமைச்சர் என்.பிரேன் சிங்கின் கீழ் அது மிகத் தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக குக்கி சமூகத்தை இனச் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்ற தீவிர சிந்தனையில் இருக்கும் மைதேயி லீபுன், அரம்பை தெங்கோல் உள்ளிட்ட குழுக்களுடன் முதல்வர் என்.பிரேன் சிங் கைகோத்திருக்கிறார்.

அமித் ஷா, மோடி,

தற்போது அரசு மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணி… அரசின் ஆயுதக் கிடங்கிலிருந்து கைப்பற்றப்பட்ட பெரும் ஆயுதங்களை மீட்க வேண்டும். குக்கி கிராமங்கள்மீதான தொடர்ச்சியான தாக்குதல்களால் தொடரும் வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அத்தகைய மோதல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எனவே, அதற்கான அரசியல் தீர்வுக்கான விவாதங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பல நாடுகள் வெளியிட்டிருக்கும் தீர்மான அறிக்கைகளுக்கு இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் இந்தக் கருத்து, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

from Tamilnadu News https://ift.tt/n0YiQxG