சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கடந்த 24-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். இதில், 70-க்கும் மேற்பட்ட மா.செ-க்கள் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் இன்று டிஜிட்டல் முறையிலான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விஜயகாந்த் சிறப்பாக, நல்லபடியாக இருக்கிறார். இந்த நேரலையை கூட பார்த்து கொண்டிருக்கிறார். மாவட்ட வாரியாக பொதுக்கூட்டம், மாநாடுகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அண்மையில் செய்தி பார்த்தேன். இந்த நிமிடம் வரை நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. எனவே தான் எங்களுக்கு அழைப்பு வரவில்லை.
கூட்டணியிலேயே இல்லாதபோது எங்களுக்கு அழைப்பு இல்லை என்று எப்படி கூற முடியும்?. தமிழகத்திற்கு எதையுமே அதிமுக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யவில்லை. தமிழகத்தில் ஊழல், கள்ளசாராயம் அதிகரித்திருக்கிறது. போதை தமிழகமாக திமுக ஆக்கிவிட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பலவிதமான முரண்பாடுகள் இருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் மூலம்தான், அவர்களை மக்கள் ஏற்பார்களா என்பது தெரியவரும். தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் காவிரி பாசன பகுதிகள் வறண்டு விட்டன. வரும் நாட்களில் மேலும் மோசமாகும் நிலை இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து உறுதியான, நல்ல முடிவை எடுக்கும். நான் முதல்வரிடம் தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவல் தவறு.

நாங்கள் மறைமுகமாக யாருடனும் பேச வேண்டிய அவசியம் இல்லை. மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த பிறகே எந்த முடிவையும் எடுப்போம். தொகுதிவாரியாக புகார் பெட்டி வைக்கப்படும் என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?. ஆசிரியர் போராட்டத்தின்போது எங்கள் அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் இரவில் தங்கினர்.
அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தோம். நம்பிவந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து, உணவளித்து அனுப்புவது விஜயகாந்த்தின் வழக்கம். ஸ்டாலின் கர்நாடகா சென்றபோது மக்கள் பிரச்னையை பற்றி பேசவில்லை. பல ஆண்டு அமைச்சராக இருந்த துரைமுருகன் காவிரியில் உரிய நீரைக் கேட்டு கடிதம் கொடுத்த பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை. கர்நாடக நம்மை ஏமாற்றுகிறது.

அதிமுக, திமுக மாறி, மாறி சோதனை நடத்துவது வழக்கம்தான். ஆனால் என்ன பறிமுதல் செய்தோம் என்பதை ஒருபோதும் வெளியிடுவதில்லை. அமைச்சர் பொன்முடி தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். ஆளுநர் அவரது வேலையைத்தான் செய்கிறார். அவர் மீது பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
லஞ்ச, ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டால் அமைச்சர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும். மொத்த தி.மு.க-வும் ஏன் செந்தில்பாலாஜிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்?. அவரால் அவர்கள் பலன் அடைந்துள்ளனர். செந்தில்பாலாஜிக்கு ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படவில்லை. அவர் அமைச்சராக தொடர்வது தவறான முன்னுதாரணம்.
காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது. காவிரி மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அரசியல் வேறு , சினிமா வேறு. நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவியது பாராட்டுக்குரியது.
அவர் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து அவர்தான் கூற வேண்டும். 40 ஆண்டு காலம் தன் வாழ்க்கையை பலருக்கும் முன்னுதாராணமாக வாழ்ந்தவர் விஜயகாந்த். இனி யார் நினைத்தாலும் அவரைப்போல வர முடியாது. எதையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவியவர் விஜயகாந்த். அவரைப்போல மற்றவர்களும் வர நினைத்தால் மோசமான விளைவைத்தான் அது ஏற்படுத்தும். பிரதமர் உலக நாடுகளை சுற்றிவருவதில் எந்த பெருமையும் இல்லை.

நம் நாட்டு பிரச்சனைக்கு பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து தீர்வு காண வேண்டும். விவசாயிகளை பிரதமர் சந்திப்பதில்லை , மக்களை சந்திக்காமல் உலக நாடுகளை பிரதமர் சுற்றுவதால் பயன் இல்லை. விஜயகாந்த் ஆலோசனைப்படி அடுத்த கட்டத்திற்கு கட்சியை எடுத்துசெல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேமுதிக தலைமையில் தனி கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. ஏதேனும் ஒரு கூட்டணியில் இடம்பெறுவோம்” என்றார்.
முன்னதாக, “விஜயகாந்த் பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மணிப்பூர் நிகழ்வில் குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். கர்நாடக அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் நடக்கும் கஞ்சா, போதை ஊசி விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்று கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்” என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட செயலாளர்கள் சிலர், “கூட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் வகையில் பொதுமக்களின் பிரச்னைகளை கையில் எடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடப்பட வேண்டும். தொண்டர்களை திரட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகக்குறுகிய காலமே இருப்பதால் கட்சிக்கு செயல் தலைவராக பிரேமலதாவை கொண்டுவர வேண்டும் என விவாதிக்கப்பட்டது. அதன்படி அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அவருக்கு பதவி வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது” என்றனர்.
from Tamilnadu News https://ift.tt/jRPSix0
