நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்குவதற்கு முந்தைய நாள் சமூக வலைதளங்களில், மணிப்பூர் கலவரத்தில் குக்கி பழங்குடியின பெண்கள் இரண்டு பேர், பழங்குடியல்லாத மைதேயி சமூக ஆண்கள் குழுவால் சாலையில் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மே 4-ம் தேதி நடந்த நிலையில், முறையாக வழக்கும் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

மணிப்பூர் நிர்வாணக் கொடுமை

ஆனால் ஆதாரம் இல்லாததால் அப்போது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என போலீஸ் கூறியது. பாதிக்கப்பட்ட பெண்ணோ, போலீஸ் தான் தங்களை அந்தக் கும்பலிடம் ஒப்படைத்தனர் என்று கூறினார். இவ்வாறிருக்க, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரின் மனைவி என்பதும், இந்த சம்பவம் போல இன்னும் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது என மணிப்பூர் எம்.எல்.ஏ-க்கள் கூட்டறிக்கை வெளியிட்டதும் இந்தப் பிரச்னையை இன்னும் தீவிரமாக்கியது.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என மத்திய அரசு கூற, `குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள் ‘எனப் பிரதமர் மோடி முதல்முறையாக மணிப்பூர் விவகாரத்தில் வாய்திறந்தார். ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள்முதல், நேற்றுவரை மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்காமல், எதிர்க்கட்சிகள் அமளி எனக் கூறி இரு அவைகளையும் சபாநாயகர்கள் ஒத்திவைத்து வந்தனர்.

மணிப்பூர் – மோடி

அதேமயம் மணிப்பூர் விவகாரத்தில் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், மணிப்பூர் விவாதம் பற்றிய மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்றைய நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கியது. ஆனால், மக்களவையில் கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முதலில் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று கோஷமிடத் தொடங்கினர்.

அதையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லா, “யாரும் கோஷம் எழுப்பாமல், அவரவர் இருக்கைகளுக்குச் செல்லுங்கள். கோஷங்கள் எழுப்புவதால் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காது. முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதால் கேள்வி நேரத்தை அனுமதிக்கவும்” என்று கூறினார். ஆனாலும் அதே நிலை நீடித்ததால், பிற்பகல் இரண்டு மணிவரை அவை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார். மாநிலங்களவையிலும் இதே நிலை என்பதால், அங்கும் பிற்பகல் இரண்டு மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் I.N.D.I.A கூட்டணி

இந்த நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இன்று காலை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி ஆலோசனைக்கூட்டத்தில் இத்தகைய முடிவு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், முன்மொழியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த முடிவு, மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்த மத்திய அரசை நிர்பந்திக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

முன்னதாக 2003-ல் வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamilnadu News https://ift.tt/rPJM6NQ