தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவை முக்கியமான துறைகள். அரசு கட்டடங்கள், அரசு குடியிருப்புகள், பாலங்கள், அணைகள், தடுப்பணைகள், ஏரி, குளங்கள், கண்மாய் என கட்டுமானம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இத்துறையின் கீழ் வருகிறது. இந்தப் பணிகளுக்கு பி.இ, எம்.இ படித்த பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள்.

தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் இத்துறை பொறியாளர்களின் பேச்சை அரசியல்வாதிகளோ, உயர் பொறுப்பில் உள்ள அரசுத்துறை செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ மதிப்பதில்லை. ஆய்வுக் கூட்டங்களில் இவர்களின் ஆலோசனைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் முனைவர் அ.வீரப்பனிடம் பேசியபோது,

சர் ஆர்தர் காட்டன் (Sir Arthur Thomas Cotton)

“ஆங்கிலேயர் ஆட்சியில் பொறியாளர்களின் நிலை மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. இன்றைக்கு நாம் கொண்டாடும் சர் ஆர்தர் காட்டன், கர்னல் ஜான் பொன்னிகுக் போன்றோர் தலைமைப் பொறியாளர்களாகவும் அரசுச் செயலாளர்களாகவும் இருந்தனர். அவர்களின் பொறியியல் சார்ந்த தொழில்நுட்பக் கருத்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசால் செயல்படுத்தப்பட்டன. கல்லணை, முக்கொம்பு, கீழணை போன்றவையும் முல்லை பெரியாறு அணையும் இன்றளவும் அந்தப் பொறியாளர்களின் புகழுக்கு சாட்சியாக நிற்கின்றன. பிற துறை அரசுச் செயலாளர்களும் மாவட்ட ஆட்சியாளர்களும் அவர்களின் அறிவுரைகள் கேட்டே செயல்பட்டனர். எந்த நிலையிலும் பொறியியல் தொழில்நுட்பத்துறைகளில் அன்றைய ஐ.ஏ.எஸ் என்றழைக்கப்படும் ஐ.சி.எஸ் அதிகாரிகளின் தலையீடு ஏதும் அனுமதிக்கப்படவில்லை.

காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் பவானிசாகர், வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு, கிருஷ்ணகிரி, அமராவதி, பாலாறு புரந்தலாறு, சாத்தனூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரிய அணைகள் பலவும் கட்டப்பட்டன. பொறியாளர்களின் திறமையை மதித்துப் போற்றினார் அன்றைய முதல்வர் காமராசர். அதற்குப்பின் 1968-ல் கலைஞர் கருணாநிதி தம் ஆட்சியில் பொறியாளார்களைப் போற்றி தமிழகத்தின் ஆறுகளில் 25-க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களைக் கட்டுவித்துப் பாசன மேலாண்மையினை மேம்படுத்தினார்.

வைகை அணை

அப்பாதுரை, பாண்டியன், நமசிவாயம், பஞ்சநாதன், சீனிவாசன், மணவாளன், மோகன கிருஷ்ணன் போன்ற திறமையான பொறியாளர்களை பெரிதும் மதித்தார். எங்களின் வேண்டுகோளை ஏற்று சிறந்த பொறியாளர்களுக்கு ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா விருதுகள் முதன்முறையாக வழங்கப்பட்டன (ஆனால் பின்னர் வந்த அதிமுக அரசு இவற்றை அடியோடு நிறுத்தியது). காவிரி, முல்லை பெரியாறு, சிறுவாணி, பரம்பிக்குளம் – ஆழியாறு போன்ற பன்மாநில நதிகளின் சிக்கல்களில் அன்றைய பாசனப் பொறியாளர்களின் கருத்துரைகளைக் கேட்டே கருணாநிதி முடிவு எடுத்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியாளர்களின் கருத்துகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.

1979-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தலைமைப் பொறியாளர்களான மணவாளன், மோகன கிருஷ்ணன் ஆகியோரின் கருத்துரையைக் கேட்காமல் தன்னிச்சையாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்ததால் இன்றளவும் தமிழ்நாடு பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது. தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குறுக்கீடுகளால் அரசின் தொழில்நுட்ப அறிவுரையாளர் என்பதை முற்றிலும் மறைத்து ஏதோ அரசுச் செயலாளர்களுக்குக் கீழ்ப் பணிபுரிபவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட கொடுமை நிகழ்ந்தேறியுள்ளது. இந்நிலைமை முற்றிலும் மாற்றப்படவேண்டும். எதையும் முழுமையாகவும், சரியாகவும் தெரியாத இளம் மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள் தொழில்நுட்பம் சார்ந்த, தேர்ந்த பொறியாளர்களுக்கு எந்தவித மதிப்பும் வாய்ப்பும் தராது தமிழகத்தின் வளர்ச்சியையும் உள்கட்டமைப்பு வேலைகளின் தரத்தையும் குறைத்து வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணை

போதாக்குறைக்கு அணைகளிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடும் நீர்வளத்துறை செயற்பொறியாளர்களின் சட்டபூர்வமான உரிமை மற்றும் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர், அரசியல்வாதிகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. மாவட்ட ஆட்சியாளர் தொடங்கி அரசுச் செயலாளர் வரை தீர்க்கவியலாத வெற்று ஆய்வுக் கூட்டங்கள் பல நடத்தப்பட்டு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் தடைப்பட்டு வருகிறது.

பாசனக் கட்டுமானங்கள், அரசின் பெருமை பேசும் கட்டடங்கள் ஆகியவற்றை உருவாக்கிய பொறியாளர்களுக்கு அதன் திறப்பு விழாக்களில் எந்தவித மரியாதையும் அளிக்கப்படாத நிலை உள்ளது. மேடையில் அனைவரோடு சேர்ந்தமரும் உரிமை கூட தரப்படாமல் ஓரங்கட்டப்படும் வேதனை நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

துறைசார்ந்த பொறியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் செயற்படுத்தும் வளர்ச்சிப்பணிகளை, இவற்றில் எந்தத் தொடர்புமில்லாத மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டு கண்காணிக்கச் செய்கிறார்கள். சென்னை போரூர் ஏரியின் நீர்பரப்புப் பகுதியை ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தரமறுத்த தலைமைப் பொறியாளர் அதிரடியாக மாற்றப்பட்டார். பாதுகாப்புடன் உள்ள ‘10 மாடித் தலைமைச் செயலகம் பாதுகாப்பற்றது’ என்று தலைமைப் பொறியாளரை அச்சுறுத்தி எழுதிய வாங்கியகொடுமை. தனிப்பட்ட காரணங்களுக்காகத் துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்டச் சாலையினைப் பாதியில் நிறுத்திய அவலம். இதற்காகத் தலைமைப் பொறியாளர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தியமை என்று பொறியாளர்களை பந்தாடிய சம்பவங்கள் நிறைய உள்ளன.

முனைவர் வீரப்பன்

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இச்செயல்களை களைய வேண்டுமென்றால் செயல் திறமையும் சிறந்த பட்டறிவுமுடைய தலைமைப் பொறியாளர்களை அரசுச் செயலாளர்களாக நியமிக்க (இந்தியாவில் முன்னேறிய பல மாநிலங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது) தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைசார்ந்த பொறியாளர்கள், தொழில்நுட்ப உயர்நிலை அலுவலர்கள் (மாவட்ட ஆட்சியர் குறுக்கீடுகளின்றி) செயல்பட அனுமதிக்க வேண்டும். மருத்துவர்கள் தம் பெயருக்குமுன்னே Dr. எனும் முன்னொட்டைப் பயன்படுத்துவது போல பொறியாளர்கள் Er. எனும் முன்னொட்டுப் போட்டுக் கொள்வதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே அரசாணை வெளியிட அனுமதியளியுங்கள். பொறியியல் துறைகளை இன்றைய வளர்ச்சிக்கேற்ப மேம்படுத்திட தமிழ்நாடு பொறியியல் சீர்திருத்த உயர் நிலைக் குழுவை அமைக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா விருதுகள் பொறியாளர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பொறியியியல் துறைகளின் செயல்பாடுகளில் இன்று பரவலாகக் காணப்படும் மாவட்ட அளவிலான அரசியல்வாதிகளின் அலப்பறைகளைக் கட்டுப்படுத்திப் பொறியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ?

from Tamilnadu News https://ift.tt/NCig6VR