டெல்லியிலிருக்கும் பிரகதி மைதான வளாகம், ‘பாரத் மண்டபம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, மறுவடிவமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று திறப்பு விழா நடைபெற்றது. இன்று காலை நடந்த திறப்பு விழா பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து, இன்று மாலை நடந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “இந்தியாவில் எனது தலைமையிலான முதல் ஆட்சிக்காலத்தில், இந்தியா பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்தது. எனது இரண்டாவது பதவிக்காலத்தில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறியிருக்கிறது.

எனது மூன்றாவது ஆட்சியில், இந்தியா முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக நிற்கும். இது இந்த மோடியின் உத்தரவாதம். சாதனைப் பதிவின் அடிப்படையில், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்போது இந்தியாவின் பொருளாதாரம் உலகின் முதல் மூன்று இடங்களில் இருக்கும். சிலர், இந்த பிரகதி மைதான `பாரத மண்டபம்’ நிறுவுவதை நிறுத்த முயன்றனர். சிலருக்கு ஒவ்வொரு வேலையையும் நிறுத்துவது என்பது நிர்பந்தம். இந்த மைதானம் குறித்து பிரேக்கிங் நியூஸில் என்னவெல்லாம் காட்டினார்கள்.
எத்தனை வழக்குகள் போடப்பட்டன. ஆனால் ஒன்று சொல்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் இதை எதிர்த்த நபர்கள் சில நிகழ்வுகளுக்கு இங்கு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” எனப் பேசினார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் G20 தலைவர்களின் கூட்டம் இந்த மைதானத்தில்தான் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Tamilnadu News https://ift.tt/0dTyoaq
