புகழ்பெற்ற கொலம்பியா மருத்துவமனையில் வேலை செய்து வந்த 64 வயதான ராபர்ட் ஹேடன் என்ற ஆண் மகபேறு மருத்துவர், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்களை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இவர் நியூயார்க்கில் மிகவும் பிரபலமான மருத்துவராக இருந்துள்ளார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக பல மாகாணங்களில் இருந்து மகளிர் இவரைத் தேடி வருவார்களாம். அப்படி தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நூற்றுக்கணக்கான பெண்களை ஹேடன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் என எதையும் பற்றி சிந்திக்காமல் ஹேடன் அவர்களிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டுள்ளார். 1990-களின் பிற்பகுதியில் ஹேடன் கொலம்பியா பல்கலைகழகத்தில் வேலை செய்ததில் இருந்து தொடங்கியிருக்கிறது அவரது குற்றப் பின்னணி.
அப்போது முதல், பல பெண்களை இவர் வன்புறுத்தியுள்ளார். ஆனால் யாரும் இவர் மீது புகார் அளிக்கவில்லை. முதன்முதலில் 2012-ம் ஆண்டு தான் ஹேடன் மீது தைரியமாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். இவரைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஹேடன் தன்னையும் துன்புறுத்தினார் என தொடர்ந்து 19 பெண்கள் இவர் மீது குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. ஹேடன் மீது தவறான நடத்தை மற்றும் கீழ்நிலை குற்றங்களின் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்துகொண்டு இருந்துள்ளது.
2017-ம் ஆண்டு #MeToo இயக்கம் பெரிதாகும் வரை இந்த வழக்கு பற்றி வெளியில் யாருக்கும் எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. அதன் பிறகு தான் நூற்றுக்கணக்கான பெண்கள் இவரால் பாதிக்கப்பட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மன்ஹாட்டனில் உள்ள ஃபெடரல் வழக்கறிஞர்கள் 2020-ல் ஹேடனுக்கு எதிராக ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தனர், பின்னர் ஹேடன் மீதான குற்றம் நீண்டுகொண்டே சென்றுள்ளது. ஹேடனால் பாதிக்கப்பட்டவர்களில் பல பிரபலங்களும் இருந்ததாகக் கூறபடுகிறது.

பல வருடங்களாக ஹேடன் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம்.
“இது போன்ற வழக்கை நான் இதற்கு முன்பு கண்டதே இல்லை. இது மிகவும் அசாதாரணமான மற்றும் மோசமான பாலியல் துஷ்பிரயோகம். வன்கொடுமைகளுக்கு அப்பாற்பட்ட கொடூரம்” என்று இந்த வழக்கை விவரித்துள்ளார் நீதிபதி ரிச்சர்டு எம்.பெர்மன்.
தான் செய்த குற்றங்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தன் தவற்றை உணர்ந்து நீதிமன்றத்திலேயே கண்ணீர் வடித்துள்ளார் ஹேடன். அப்போது அவர், “நான் ஏற்படுத்திய அனைத்து வலிகளுக்கும் நான் மிகவும் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார். இவருக்கு அளித்திருக்கும் தண்டனை பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு பேச தைரியத்தைக் கொடுக்கும் என நம்புவதாக இந்த வழக்கில் சாட்சி கூறிய 9 பெண்கள் தெரிவித்துள்ளனர்.
from Tamilnadu News https://ift.tt/t8U4gjc
