மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும், பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதும், விவாதத்துக்குத் தயார் என்று கூறும் பா.ஜ.க அரசு, தொடர்ந்து ஐந்து நாள்களாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து வருகிறது. விவாதம் நடைபெறாமல் அவை ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என பா.ஜ.க எதிர்க்கட்சிகள் மீது பழியும் சுமத்துகிறது.

தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதால், பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, நேற்று காங்கிரஸ் சார்பில் மக்களவை செயலாளரிடம் அதற்கான நோட்டீஸை சமர்ப்பித்தது. காங்கிரஸின் அந்த நோட்டீஸும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மணிப்பூர் விவகாரத்தில் இவ்வாறாக நாடாளுமன்றத்தில் பரபரப்பான சூழல் அரங்கேறிக் கொண்டிருக்க, `மணிப்பூரை ராகுல் காந்தி எப்படிப் பற்றவைத்தார் என்பதைச் சொல்ல உங்களுக்கு எப்போது தைரியம் வரும்’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காங்கிரஸைக் காட்டமாகக் கேள்வி கேட்டிருக்கிறார்.

முன்னதாக மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி அமீ யாஜ்னிக், மணிப்பூர் வன்முறை குறித்து பெண் அமைச்சர்கள் பேசுவார்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதையடுத்து உடனடியாக இதற்கு எதிர்வினையாற்றிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “இதனை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஏனெனில், மணிப்பூர் மட்டுமல்லாது, ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர் விவகாரங்கள் குறித்தும் பெண் அமைச்சர்கள், பெண் அரசியல்வாதிகள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடப்பதைப் பற்றி விவாதிக்க உங்களுக்கு எப்போது தைரியம் வரும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்கள் எவ்வாறு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை எங்களிடம் சொல்ல உங்களுக்கு எப்போது தைரியம் வரும். மணிப்பூரை ராகுல் காந்தி எப்படிப் பற்றவைத்தார் என்பதைச் சொல்ல உங்களுக்கு எப்போது தைரியம் வரும். எனவே, இந்த அமைச்சரவையில் இருக்கும் பெண் அமைச்சர்கள் மீது வீணாக அவதூறு பரப்ப வேண்டாம்” என்று ஆவேசமாகக் கூறினார்.
from Tamilnadu News https://ift.tt/WEtOXx9
