தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பதவியிலிருந்து சிவ.பத்மநாதன் விடுவிக்கப்பட்டதற்கு, உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராகவே வேட்பாளரை நிறுத்தியது, சொந்தக் கட்சிக்காரர்களிடமே கைநீட்டியது, பெண் நிர்வாகிகளை மோசமாக நடத்தியது… என்று அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். இத்தனை காலம் அவர் பதவி தப்பிப்பதற்கு அறிவாலயத்தின் முக்கியப் புள்ளி ஒருவரும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரும்தான் காரணமாம். பதவி பறி போகவிருக்கும் தகவலறிந்து சிவ.பத்மநாதன் உடனடியாக அறிவாலயப் புள்ளியைத் தொடர்புகொண்டு, “அண்ணே… இந்த ஒருவாட்டி மட்டும் ஏதாவது செஞ்சு பதவியைக் காப்பாத்திக் கொடுங்கண்ணே. ப்ளீஸ்…” என்று கெஞ்சினாராம்.

சிவ.பத்மநாதன்

“உன்மேல தலைமை உச்சகட்ட கடுப்புல இருக்கு… என்கிட்ட இது குறித்து நீ பேசினதுகூட வெளியில தெரிய வேணாம்” எனச் சொல்லி பாதியிலேயே இணைப்பைத் துண்டித்துக்கொண்டாராம். “பதவியை வைத்துக்கொண்டு ஓவர் ஆட்டம் போட்டால் இதுதான் கதி” என முணுமுணுக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. விக்கிரவாண்டி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர் கலிவரதன், முன்னாள் முதல்வர் கருணாநிதி, கனிமொழி எம்.பி ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ‘அவர் பேசியது தவறுதான். ஆனால், இப்படிப் பேசினால் தன்னைக் கைதுசெய்வார்கள் என்று தெரிந்தேதான் பேசியிருக்கிறார்’ என்கிறார்கள் உள்ளூர் கமலாலய நிர்வாகிகள். ஏனென்று கேட்டால், ‘கலிவரதன் மீது சொந்தக் கட்சி நிர்வாகிகளே கொலை மிரட்டல் தொடங்கி பாலியல் புகார் வரையில் போலீஸில் கொடுத்திருக்கிறார்கள். இது தவிர, ‘அண்ணாமலை என்ன கடவுளா?’ என்றும், கட்சி நிர்வாகிகளை ஆபாசமாகத் திட்டியது போன்றவற்றுக்கான ஆடியோ ஆதாரங்களும் வெளியாகி சர்ச்சையாகியிருக்கிறது.

பாஜக ஆர்ப்பாட்டம் – விக்கிரவாண்டி

இப்படி அடுக்கடுக்கான புகார்களால் கலிவரதனை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து நீக்க மாநிலத் தலைமை தயாரானது. இந்தத் தகவல் காதுகளை எட்டியதால்தான், வேண்டுமென்றே தி.மு.க தலைவர்களை அவதூறாகப் பேசி சிறைக்குப் போய் தியாகியாகிவிட்டார்’ என்கிறார்கள் அவர்கள்.

சென்னையில் ஷாப்பிங் ஏரியாவில் இருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் போன் அழைப்புகளை எடுப்பதேயில்லையாம். சமீபத்தில் வழக்கு விஷயமாக கொங்கு மண்டலத்திலிருக்கும் சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் ஷாப்பிங் ஏரியா இளம் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு போன் செய்தாராம். அதற்கு, ‘I am busy’ என மெசேஜ் அனுப்பிய இளம் ஐ.பி.எஸ் அதிகாரி, அதன் பிறகு சீனியர் ஆபீஸரிடம் பேசவே இல்லையாம். அதனால் நொந்துபோன அவர், “என்னிடம் வேலை பார்க்கும்போதும் இப்படித்தான் இருந்தார்… இப்போதும் அப்படியே இருக்கிறார்” என தன்னுடைய பேட்ஜ் மேட் அதிகாரிகளிடம் கூறி ஆதங்கப்பட்டிருக்கிறார். ‘ஏதாவது வம்பில் சிக்கட்டும்… அப்புறம் இருக்குது அவருக்கு’ என்று கறுவிக்கொண்டிருக்கிறார்களாம் சீனியர்கள்.

ஒற்றைத் தலைமையான கையோடு, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களையெல்லாம் அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவரும் அசைன்மென்ட்டை சீனியர்களுக்குக் கொடுத்தார் எடப்பாடி. அதன்படி, தினகரன் தரப்புக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார்கள் சீனியர்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படி யாருமே அ.தி.மு.க-வுக்கு வருவதில்லையாம். “எடப்பாடி வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்… ‘கட்சியில் மீண்டும் சேர விரும்புவோர், மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் அல்லது நேரில் மன்னிப்பு கோர வேண்டும்’ என்று தேவையில்லாமல் அறிக்கைவிட்டதுதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

எடப்பாடி பழனிசாமி

கட்சிக்கு மீண்டும் வர ஆவலாக இருந்தவர்கள்கூட, ‘கூப்பிட்டு வைத்து மூக்கறுக்கப் பார்க்கிறார்களே’ என்று தலைதெறிக்க ஓடிவிட்டார்கள்” என்று இதன் பின்னணியைச் சொல்கிறார்கள் சீனியர்கள். கூடவே, “எடப்பாடிக்கு அவ்வளவு திமிரா… அவருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று, ஓ.பி.எஸ் அறிவித்திருக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு அ.ம.மு.க-வினர் தன்னார்வத்தோடு ஆள் திரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்…” என்றும் `உச்’ கொட்டுகிறார்கள் சீனியர்கள்.

மேற்கே இருக்கும் முக்கிய மாவட்டத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தடதடக்கின்றன. பொறுப்பு அமைச்சர் ‘பவராக’ இருந்தபோதே இனிஷியல் மாவட்டச் செயலாளர் ஒருவரை மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அந்த மா.செ-வின் நல்ல நேரம், அமைச்சருக்குப் ‘பவர்’ போய்விட்டது.

இப்போது அடுத்த சிக்கல். கட்சிப் பணியில் சுணக்கம் காட்டுவதாக ஒரு புகார், ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்ததாக ஒரு ஆடியோ என்று தொடர்ந்து புகார்கள் வருவதால், அவரை மாற்ற முடிவெடுத்திருக்கிறதாம் தி.மு.க தலைமை. கூடவே, பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டெழுத்து மா.செ-வையும் மாற்றவிருப்பதாகத் தகவல்கள் சிறகடிக்கின்றன. இதனால், தற்காலிக பொறுப்பு அமைச்சர் பக்கம் தாவி, பதவியைத் தற்காத்துக்கொள்ளலாமா என்ற யோசனையில் இருக்கிறார்களாம் அந்த மா.செ-க்கள்!

from Tamilnadu News https://ift.tt/c6qK1JH