திருச்சியில் மிகப்பெரிய அளவில் வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க. முதலில் இரண்டு நாள்கள் நடத்தத் திட்டமிட்டு, பிறகு அரை நாள் என முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், முதல்வர் அதை ஒரு நாள் நிகழ்வாக நடத்தலாம் எனவும், மதிய உணவு கொடுக்கலாம் எனவும் திட்டமிட்டிருக்கிறார். மொத்தமுள்ள 66,000 பாக முகவர்களையும் அழைத்து நிகழ்ச்சி நடத்தலாம் எனத் திட்டமிட்டபோது, அவ்வளவு பெரிய கூட்டத்தைச் சமாளிப்பது கடினம் என்பதால், பிஎல்ஏ நிலையில் இருப்பவர்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
மொத்தம் 12 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் 11 ஆயிரம் கலந்துகொண்டிருக்கிறார்கள். முதலில் என்.ஆர்.இளங்கோ வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது, தேர்தல் ஆணையம், தேர்தல் நடைமுறைகள் குறித்து வகுப்பெடுக்க, பின்னர் சமூக ஊடகங்களைத் தேர்தலுக்காக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தி வகுப்பெடுத்திருக்கிறார். இவர்கள் தவிர, அமைச்சர்கள் அன்பில் மகேஸ், சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோரும் வகுப்பெடுத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் செலவுகள் குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல்களெல்லாம் `அடடே’ ரகங்கள்…
“நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்ட ஐடி கார்டு கொடுத்திருக்கிறார்கள். அந்த ஐடி கார்டை ஸ்கேன் செய்த பிறகே அனைவரையும் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். இதனால், தொடக்கத்தில் கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டு செட்டிலாக காலதாமதம் ஆனது. எனவே, முதலில் பேசிய என்.ஆர்.இளங்கோவின் பேச்சை யாரும் சரியாக கவனிக்கவில்லை. இதையடுத்து அமைச்சர்கள் பேசும்போதுதான் கூட்டம் கொஞ்சம் செட்டிலாகியிருக்கிறது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பேச வந்த இராஜீவ் காந்தி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்விதம் குறித்துப் பேசியதற்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.
ஆ.ராசா அனைவரும் பேசியதைத் தொகுத்து வழங்கியதுபோலப் பேச, துரைமுருகன் தன் பங்குக்குத் தேர்தலை அணுகும்விதம் குறித்துப் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சுகளுக்கிடையே முதல்வர் மேடைக்கு வரச் சற்று தாமதம் ஆக, அந்த இடைவெளியில் ஐடி மற்றும் இளைஞரணிகள் ஏற்பாடு செய்திருந்த வீடியோக்களைப் போட்டுக் காட்டி கூட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இறுதியில் கூட்ட நெரிசலில் வெளியேற முடியாமல் சிலர் சுவர் ஏறிக் குதித்திருக்கிறார்கள். கலந்துகொண்டவர்களிடம் நிகழ்ச்சி குறித்து ஃபீட்பேக் கேட்டிருக்கிறார்கள்” என நிகழ்ச்சியில் பங்கேற்ற சீனியர் நிர்வாகி ஒருவர் உள்ளே நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் தொடர்ந்த அவர்… “அதுமட்டுமல்ல, அரசின் திட்டங்கள் அடங்கிய புத்தகங்களையும் படிக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு அடுத்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறதாம் தலைமை. அநேகமாக மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பனிடம்தான் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்கிறார்கள். அது குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாள்களில் வெளியாகும் என்கிறார்கள்” என அடுத்த நிகழ்ச்சி குறித்த தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
“நிகழ்ச்சி முழுவதும் முதல்வர் மேற்பார்வையில் நடந்திருக்கிறது. `நிகழ்ச்சியைத் திருச்சியில் நடத்தலாம்’ என்றதுமே, அதை நேருவிடம் ஒப்படைக்கலாம் என்பதும் முதல்வரின் சாய்ஸ்தான் என்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன் 65, அவித்த முட்டை, தயிர் சாதம் என அசத்தலான விருந்துக்கும் கே.என்.நேரு ஏற்பாடு செய்திருந்தார்.
6,000 கிலோ மட்டன், 4,000 கிலோ சிக்கன், 5,000 கிலோ சீரகச் சம்பா அரிசி, 30,000 முட்டை என தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார். சாப்பாட்டுக்கான செலவு மட்டும் சுமார் கோடியைத் தாண்டும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மேடை அமைப்பு, பந்தல், வரவேற்பு ஏற்பாடுகள் என இதற்கும் மிகப்பெரிய செலவு செய்திருக்கிறார் நேரு. அது மட்டும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது” என நிகழ்ச்சியில் நடந்த சில சிக்கல்களைப் பகிர்ந்துகொண்டார் அதில் பங்கேற்ற சீனியர் அமைச்சர் ஒருவர்.

“நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது அனைத்து பாக முகவர்களுக்கும் ஐ.டி கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலுள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், அவரின் முழுத் தகவல்களும் இதில் அடங்கும். பாக முகவர்கள்தான் தேர்தலை நடத்தும் அச்சாணி. எனவேதான், தலைமை தன் தேர்தல் பணியை முதலில் பாக முகவர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறது” எனப் பகிர்ந்துகொண்டார்.
தி.மு.க-வின் இந்த முயற்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எந்த அளவுக்குப் பயன்படப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
from Tamilnadu News https://ift.tt/6CY5Fnd
