மணிப்பூரில் பெரும்பான்மையாகவும், அதேசமயம் பழங்குடியல்லாத சமூகமாகவும் இருக்கும் மைதேயி இனத்தவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று வலியுறுத்தி குக்கி உள்ளிட்ட பழங்குடி சமூகங்கள் மே 3-ம் அமைதிப் பேரணி நடத்தினர். ஆனால், இந்த அமைதிப் பேரணியை சமூக விரோதிக் கும்பல் வேண்டுமென்றே திட்டமிட்டு பெருங்கலவரமாக வெடிக்கவைத்தது. மே 3-ல் பற்றியெரியத் தொடங்கிய இந்த வன்முறைத் தீ இன்னும் அணையாமல், இரட்டை இன்ஜின் பா.ஜ.க அரசால் கட்டுக்குள் கொண்டுவரப்படாமல் சுடர்விட்டுக்கொண்டே இருக்கிறது.

அதோடு, கலவரத்தின் உண்மை நிலையை மறைக்கும் விதமாக, கலவரம் தொடர்பாக வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில், கலவரம் தொடங்கிய நாளிலேயே மாநிலம் முழுவதும் இணைய சேவையை அரசு துண்டித்தது. இதனால், மக்களிடையே தகவல் தொடர்புகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான், வன்முறை வெடிக்கத்தொடங்கிய அடுத்த நாளே, குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவர், மைதேயி சமூக ஆண்களால் நிர்வாணக் கொடுமை, பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம், கடந்த வாரம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி, நாட்டையே கொந்தளிப்புக்குள்ளாக்கியது.
இப்படியிருக்க, பல்வேறு வலியுறுத்தல்கள், கோரிக்கைகளுக்குப் பின்னர் ஒருவழியாக, நிபந்தனைகளுடன் இணைய சேவை தடையை அரசு நேற்று நீக்கியது. அதாவது, பிராட்பேண்ட் இணைய சேவைக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இன்னும் செல்போன் இணைய சேவைக்குத் தடை நீடிக்கிறது. இந்த நிலையில், இணைய சேவை முடக்கத்தால் குக்கி ஐ.என்.பி.ஐ தன்னார்வலர்கள் (Kuki INPI volunteers) தாமாக முன்வந்து, கலவரத்தின் நிலை, அரசியல் கள நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக (the voice of the revolution) `புரட்சியின் குரல்’ என்ற பெயரில் செய்தித்தாளை அச்சிட்டு வருகின்றனர்.

இந்த செய்தித்தாளின் ஆசிரியர் ஹாபு, கிடைக்கக்கூடிய தகவல்கள், ஆதரங்காளைக் கொண்டு செய்தித்தாளை வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்தப் பணியை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள், தினமும் 1,000 பிரதிகளை அச்சிட்டு நகர் முழுவதும் விநியோகம் செய்து, செய்தி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்கின்றனர். அதோடு, செய்தித்தாள் நகரின் மூலை முடுக்குகளையெல்லாம் சென்றடைவதை உறுதி செய்வதில் விநியோகஸ்தர் மொன்னம் என்பவர் முக்கிய பங்கு வகிக்கிறார். கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களையும் சென்றடையும் இந்த `புரட்சியின் குரல்’ செய்தித்தாளில், மணிப்பூரின் தற்போதைய பிரச்னைகள், மோதலுக்கு மத்தியில் குக்கி உச்ச தலைமையின் செயல்திட்டங்கள் பற்றிய புதுப்பிப்புகள் ஆகியவை இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
from Tamilnadu News https://ift.tt/x0kszSP
