தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் ஊழல் பட்டியலை அம்பலப்படுத்தப் போவதாகக் கூறி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 14-ம் தேதி திமுக ஃபைல்ஸ் முதல் பாகத்தை வெளியிட்டார். ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, கனிமொழி, கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு, உதயநிதி, கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, பொன்முடி, கெளதம சிகாமணி, அன்பில் மகேஸ், சபரீசன் ஆகியோரது பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால் ஊழல் பட்டியல் எனக் கூறிவிட்டு, கடைசியில் சொத்துப் பட்டியலைத்தான் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

அண்ணாமலை – விகடன் கருத்துக்கணிப்பு

“ஊழலுக்கு முகாந்திரமே சொத்துக் குவிப்புதான், திமுக-வினரின் சொத்துக் குவிப்பை நாங்கள் அம்பலப்படுத்தியிருக்கிறோம், தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்” என்று பா.ஜ.க-வினர் பதிலடி தந்தனர். அண்ணாமலை மீது திமுக-வினர் அவதூறு வழக்குகளும் தொடந்தனர். டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், அண்மையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார் அண்ணாமலை. இந்த சூழலில் அண்ணாமையின் நடைப்பயணத்திற்கு முன்பாக திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலும் திமுகவினரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

ஜூலை 26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த அண்ணாமலை, டாஸ்மாக் மது விற்பனையைக் குறைப்பது தொடர்பாகவும், அதனால் ஏற்படப்போகும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவது தொடர்பாகவும் வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களில், 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பினாமி ஆவணங்களை சமர்பித்துள்ளார் என்கிரார்கள் பாகவினர். மிகப்பெரிய பெட்டியில் ஆவணங்கள் கொடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

கரு. நாகராஜன்

இதன் பின்னர் ராஜ் பவன் வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், “திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் குறித்த ஆவணங்கள் மிகப்பெரிய பெட்டியில் வைத்து ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 9 அமைச்சர்களின் பினாமி சொத்துக்கள், ஊழல்கள் அதில் அடங்கி உள்ளது. மீரட்டில் உள்ள பிரபல பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியான பேரமான் பெஸ்டிசைட் நிறுவனத்தின் பேரில் போலியாக ஒருவர் தமிழ்நாடு மெடிக்கல் கார்பரேஷணுக்கு பூச்சி கொல்லிகளை சப்ளை செய்கிறார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வீதம் கடந்த 2 ஆண்டுகளாக 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஒன் என்ற அரசின் மென்பொருள் நிறுவனம் படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு 95.4% பங்குகள் விற்கப்பட்டுள்ளன. அதன்மூலம் அரசுக்கு 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளுக்கு ஒட்டப்படும் reflecter ஸ்டிக்கர் தயாரிப்பதற்காக, முன் அனுபவம் இல்லாத 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 5 நிறுவனங்களும் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் இல்லங்கள் முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் அரசுக்கு 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கான விவரங்கள் மற்றும் பினாமி விவரங்கள் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

https://platform.twitter.com/widgets.js

திமுக பைல்ஸ் இரண்டாம் பாகம் குறித்து நடைப்பயணத்தின்போது அண்ணாமலை விரிவாக பேட்டி கொடுப்பார்” என்றார்.

அதிமுக-வினர் மீதான ஊழல் குற்றச்சாட்டு பட்டியல்கள் எப்போது வெளியாகும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கரு.நாகராஜன் பதில் சொல்லாமல் கடந்துவிட்டார். கரு நாகராஜனின் செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே, அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தில் திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் குறித்த விளக்க காணொளி ஒன்றும் பகிரப்பட்டது. அதில், ஆளுநரிடம் பாஜக அளித்த ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கான விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்தவர்களில் அதிகப்படியான ஆண்டுகளை ஆட்சி செய்தவர்கள் அதிமுகவினர்தான், அவர்கள் மீதான ஊழல் பட்டியல் எப்போது வெளியாகும் என்றும் திமுக ஃபைல்ஸ் முதல் பாகத்தின்போதே பலரும் கேள்வி எழுப்பினர். `இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் யாராக இருந்தாலும் ஊழலை அம்பலப்படுத்துவோம்’ என அதற்கு அப்போதே பதில் கொடுத்தார் அண்ணாமலை.

இக்கருத்துக்கு அதிமுகவில் இருந்து மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. `ஊழல் செய்திருந்தால்… என்றுதானே சொல்கிறோம், அதிமுகவினர் ஏன் அதற்குள் ஆவேசப்பட்டு எதிர்க் கருத்துக்களை கூற வேண்டும்’ என்று பாஜக-வினரும் பதிலடி கொடுத்தனர். ஊழல் குற்றச்சாட்டுக்கள், ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனம் போன்ற பல சிக்கல்களால் இரு கட்சிகளின் கூட்டணியிலும் அவ்வப்போது சலசலப்பு எழுந்துகொண்டே இருந்தது.

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி

அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, கூட்டணியை அதிமுக-வும் பாஜக-வும் உறுதிப்படுத்தியிருக்கிறது. எனவே அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி பாஜக இனி பேசாது, அண்ணாமலையின் ஊழல் ஒழிப்பு என்பது அரசியல் நாடகம் என்று திமுக கூட்டணியில் இருக்கும் பல்வேறு கட்சிகள் விமர்சனங்களை வைத்திருக்கின்றன. இந்த சூழலில் திமுக ஃபைல்ஸ் முதல் பாகம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, இரண்டாம் பாகம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து பாஜக மற்றும் திமுக தரப்பில் கேள்வி எழுப்பினோம்.

அஸ்வத்தாமன், பாஜக:

“திமுக ஃபைல்ஸ் முதல் பாகம் மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஊழலுக்கு எதிராக மக்களே பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவே எங்கள் சாதனைதான். திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகத்தை பொறுத்தவரை, பினாமிகளை கண்டறிந்து ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறோம். பினாமி சொத்துக்களை வெளியிடுவதை விசாரணை அமைப்புகளிடமோ, ஆளுநரிடமோ கொடுப்பதுதான் சரியாக இருக்கும். அந்த அடிப்படையில்தான் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை ஒப்புதல் கொடுக்க வேண்டியதே ஆளுநர்தான். குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்து, நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்திருக்கிறார்.

அஸ்வத்தாமன்

ஊழலுக்கு எதிராக போராடுகிற இளைஞராக அண்ணாமலை கடமையைச் செய்திருக்கிறார். தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மக்களை மடைமாற்றுவதற்காக, அதிமுகவினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்ன ஆனது என்று திமுக-வினர் பேசுகிறார்கள். அந்த மடைமாற்றம் இனி தமிழ்நாட்டில் எடுபடாது. தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியை அம்பலப்படுத்தி வருகிறோம். ஊழல் செய்ததால்தானே செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார்? கனிம வளக் கொள்ளை நடக்கிறதா இல்லையா? ஊழலுக்கு எதிரான எங்கள் பணி தொடரும்.” என்கிறார்.

தமிழ் கா.அமுதரசன், திமுக

“அரசியல் செய்வதற்காக காரணம் தேடிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. முதல் பாகமே மிகப்பெரிய ஃபிளாப் ஆனது. அதேபோலத்தான் இப்போதும் ஆகும். அண்ணாமலையின் விளம்பர வெறி மட்டும்தான் இதில் தெரிகிறது. பாஜக கையில்தான் அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை இருக்கிறது. சட்டத்திற்கு விரோதமாக பணம், சொத்து குவித்திருந்தால் அவர்கள் நேரடியாக வந்து விசாரணை நடத்தலாமே? ஐஸ்பெட்டி போல ஒரு பெட்டியில் அதை ஆளுநரிடம் கொண்டுபோய் கொடுத்தது என்பது ஒருநாள் செய்தியில் வர வேண்டுமென்ற பரபரப்புக்காக மட்டும்தான். வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் தகவல்களை வெட்டி, ஒட்டித்தான் முதல் பாகத்தையே வெளியிட்டார்கள்.

அமுதரசன்

அதேவேலையைத் தான் இப்போதும் செய்திருக்கிறார்கள். அதிமுக-வினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இன்னும் ஒப்புதல் தராதவர் ஆளுநர். அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறோம். அண்ணாமலையின் பூச்சாண்டி காட்டும் வேலை எங்களிடம் எடுபடாது. அதிமுக-வின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை சொன்னாரே? கூட்டணியை டெல்லி உறுதிப்படுத்திவிட்டதால் அதுபற்றி வாய் திறக்கவில்லை. எவ்வளவு ஊழல்வாதிகளாக இருந்தாலும் பாஜக-வின் வாஷிங் மெஷினில் விழுந்தால் ஊழல் கறை நீங்கி புனிதர்கள் ஆகிவிடுவார்கள். ஊழலைப் பற்றி பேசவே தகுதியில்லாத கட்சி பாஜக.” என்றார் காட்டமாக.

from Tamilnadu News https://ift.tt/Hs7lG8D