`என் மண் என் மக்கள்’ என்ற முழக்கத்துடன் ஊழலுக்கு எதிராக ராமேஸ்வரத்திலிருந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விழாவில் கலந்துகொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க சார்பில் அண்ணாமலையின் இந்தப் பாதயாத்திரையை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதில், அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்’ என்ற முழக்கத்தின்படியே, `பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா… நிர்வாணமாக்கப்படும் பெண்கள் உங்கள் மக்கள் இல்லையா… சொல்லுங்கள் எக்ஸ் ஆபீஸர் அண்ணாமலை’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அண்ணாமலை ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கி மூன்று நாள்கள் ராமநாதபுரம் முழுவதும் வலம் வரவிருக்கும் நிலையில், மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் பா.ஜ.க-வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த போஸ்டர் விவகாரம் குறித்து தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம். “மத்திய பா.ஜ.க அரசு கடந்த 9 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து தமிழக மக்களுக்காக எந்த நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. இப்போது வந்து `என் மக்கள், என் மண்’ என்று நாடகமாடுகின்றனர். ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் வெற்றிவாகை சூடுவார் என்ற மாய பிம்பத்தை பா‌.ஜ.க-வினர் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கின்றனர். ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டு சுமார் 750 பூத்களில், நூறு பூத்களுக்குக்கூட ஏஜென்ட் போட ஆள் இல்லாமல் பா.ஜ.க-வினர் தவித்து வருகின்றனர். ஒருவேளை ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட திட்டமிட்டால், கூடுதலாக வேறு எந்தத் தொகுதியிலும் நிற்காமல் தைரியமாக ராமநாதபுரத்தில் மட்டுமே தனித்துப் போட்டியிட வேண்டும்.

அப்படி போட்டியிட்டால் அவர் டெபாசிட்கூட வாங்க மாட்டார் என்பதை என்னால் ஆணித்தரமாகச் சொல்ல முடியும். ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தி.மு.க முதலிடத்தைப் பிடிக்கும். நாங்கள் சவால் விடுகிறோம், எங்கள் சவாலுக்கு பா.ஜ.க-வும், மோடியும் தயாரா… இரண்டு தொகுதிகளில் நின்று ஒன்றில் வெற்றி பெற்று, ஒன்றில் தோற்றால்கூட பரவாயில்லை பிரதமர் ஆகிவிடலாம் என்ற குறுகிய மனப்பான்மையுடையவர் எப்படி தைரியமாக போட்டியிடுவார்.

அண்ணாமலை பாதயாத்திரை விழா நடைபெறும் மேடை

இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். அதில் மத வெறியைப் பரப்புவதற்காக பா.ஜ.க-வினர் முயன்று வருகின்றனர். அது ஒருபோதும் தமிழகத்தில் நடக்காது, இங்கு மனிதம் மட்டுமே மேலோங்கி உள்ளது.

இராஜீவ் காந்தி

மோடி போட்டியிட்டு தோற்றால் மோடியை தோற்கடித்த மண் ராமநாதபுரம் என்ற வரலாற்றை படைப்போம். அதனால்தான், அண்ணாமலையின் பாதயாத்திரையை விமர்சித்து போஸ்ட்டர்கள் ஒட்டியிருக்கிறோம்” எனக் கூறினார்.

from Tamilnadu News https://ift.tt/iMsx4Cq