சிறைக் கைதிகள் தங்கள் இணையருடன் சிறையிலேயே பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான நடைமுறை இந்தியாவிலேயே முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதேபோல இங்கும் கொண்டுவர வேண்டும் என்பது பற்றிய விவாதம் சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அளித்திருக்கும் பரிந்துரையால் எழுந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறைக்கைதிகளுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

சிறைச்சாலை

இந்திய சிறைகளில் சுமார் 22,000 பெண் கைதிகள் உட்பட மொத்தம் 5,55,000 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு, உணவு, மருத்துவம் போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர்களின் பாலியல் உணர்வுகளுக்கு அங்கு வடிகால் இல்லை. அதன் காரணமாக, முறையற்ற பாலியல் உறவுகளுக்கு கைதிகள் ஆட்படுகிறார்கள். பாலியல் அத்துமீறல்களும் சிறைகளில் நிகழ்கின்றன என்று செய்திகள் வருகின்றன.

சிறைச்சாலைகளில் ஓரினச்சேர்க்கை நடப்பதாகவும், அதனால் ஹெச்.ஐ.வி., பால்வினை நோய்கள் ஆகியவற்றால் கைதிகள் பாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. இந்தப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டுதான், சிறைக் கைதிகளின் பாலியல் தேவைகளை நிறைவேற்றும் வகையில், அவர்களின் இணையருடன் தாம்பத்யம் வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடு வேண்டும் என்கிற குரலை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எழுப்பினர்.

தேயும் தாம்பத்யம்

சிறைக் கைதிகளின் இணையர்கள் சிறைக்குச் சென்று பாலியல் உறவை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், சவுதி அரேபியா, கனடா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பிரேசில், பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் கைதிகள் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டு. இந்தியாவிலும் அந்த நடைமுறை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு அதை நடைமுறைப்படுத்தியது.

பஞ்சாப் மாநிலத்தில் கோவிந்த்வால் சாஹிப் மத்திய சிறை, பதிண்டா பெண்கள் சிறை, நபா மாவட்ட சிறை ஆகிய மூன்று சிறைகளில் செப்டம்பர் 20-ம் தேதி முதல் கைதிகள் தங்கள் இணையருடன் தாம்பத்யம் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. கொலை வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று, மத்திய சிறையில் 60 வயதான ஒருவர் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்குத்தான் முதன் முறையாக சிறையில் தாம்பத்ய உறவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், பஞ்சாப் மாநிலத்தின் வேறு சில மத்திய சிறைகளிலும், மாவட்ட சிறைகளிலும் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

சிறை

நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்களை தங்கள் இணையருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அனுமதித்தால், அவர்களின் மன அழுத்தம் குறையும் என்றும், நம்பிக்கை உருவாகும் என்றும் மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள். நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள், பரோலில் செல்ல தகுதி இல்லாதவர்கள், நன்னடத்தை கைதிகள், ஓராண்டு காலம் சிறையில் தவறு எதுவும் செய்யாதவர்கள் போன்ற கைதிகளுக்கு தாம்பத்ய உறவுக்கான அனுமதியில் முன்னுரிமை வழங்கலாம் என்கிறார்கள்.

யாருக்கெல்லாம் கூடாது என பஞ்சாப் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டிருக்கிறது. பரோலில் அடிக்கடி வீட்டுக்குச் செல்லக்கூடியவர்கள், ஆபத்தான கைதிகள், ‘தாதா’க்கள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் வியாபாரிகள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், குடும்ப வன்முறையில் ஈடுபட்டவர்கள், ஹெச்.ஐ.வி.,பால்வினை நோய்கள், காசநோய் போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு தாம்பத்ய உறவுக்கான அனுமதி வழங்கப்படாது என்கிறது பஞ்சாப் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்.

பஞ்சாப் மாநில சிறைகளில் தாம்பத்ய உறவுக்கு வசதியாக பாதுகாப்பான இடங்களில் அறைகள் இருக்கின்றன. கட்டில், குளியறை போன்ற வசதிகள் அந்த அறைகளில் இருக்கின்றன. கைதிகள் தங்கள் இணையருடன் சுமார் இரண்டு மணி நேரம் இணையருடன் தனிமையில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த அனுமதி வழங்கப்படும் என்கிறது பஞ்சாப் அரசு. கைதியின் மனைவி அல்லது கணவர் என்பதை நிரூபிக்க திருமணச் சான்றிதழ், ஆதார் அட்டை போன்ற சான்று சிறை நிர்வாகத்திடம் அளிக்கப்பட வேண்டும்.

பஞ்சாப்பைப்போல மற்ற மாநிலங்களிலும் கைதிகளுக்கு இத்தகைய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்கிற கருத்து எழுந்தது. இந்த நிலையில்தான், சிறையில் கைதிகளுக்கு தாம்பத்ய உறவுக்கான அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்

திருவள்ளூர் மாவட்டத்துக்கு பொறுப்பு நீதிபதியாக இருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சமீபத்தில் புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறைக்கைதிகளுக்கு கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை அரசுக்கு அளித்தார். அதில் முக்கியமானது, சிறைக்கைதிகளுக்கு தாம்பத்ய உறவுக்கான அனுமதியை வழங்க வேண்டும் என்பது. பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இத்தகைய அனுமதி வழங்கப்படுமா என்பது அரசு பரிந்துரையை பரிசீலிக்கும் போது தான் தெரிய வரும்!

from Tamilnadu News https://ift.tt/I2th1yU