இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த சம்பவங்களில் ஒன்று, மணிப்பூர் கலவரம். ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகள் மணிப்பூர் விவகாரத்தில் இந்தியாவில் நடந்த, நடந்துவரும் கொடூரங்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். மணிப்பூரில் கலவரம் நடந்துகொண்டிருந்தபோது உலகின் பல நாடுகளுக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார் பிரதமர் மோடி என எதிர்க்கட்சிகள் விமர்சனமும் செய்தன.

விகடன் கருத்துக்கணிப்பு

இதற்கிடையில், கடந்த மே மாதம் 4-ம் தேதி குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியெடுத்தது. அந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் பல்வேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள், கண்டனங்கள் எழத் தொடங்கின.

இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 20-ம் தேதி தொடங்கியது. அப்போதுதான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வெளியே, “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், மணிப்பூர் மகள்களுக்கு நடந்தது அவமானகரமானது” எனக் குமுறினார். ஆனால், நாடாளுமன்றத்துக்குள் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை என்றும், வன்முறைச் சம்பவம் குறித்து விவாதிக்க மத்திய அரசு பயப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

மோடி

அதன் காரணமாகவே, நாடாளுமன்றம் கூச்சல், குழப்பம், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் நிரம்பிவழிகிறது. இந்தச் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `மணிப்பூர் விவகாரம் குறித்து சட்டவிதி 176-ன்கீழ் மட்டுமே விவாதிக்கத் தயார்’ என அறிவித்தார்.

ஆனால், 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிதி 267-ன்கீழ் மணிப்பூர் கொடுமை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றளவும், மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில், விகடன் தனது வலைதளப்பக்கத்தில், “மணிப்பூர் விவகாரத்தை பா.ஜ.க அரசு கையாளும் விதம்…. “சரியாகவே கையாளுகிறது” – “ஓரளவுக்கு ஓகே” – “மிக மோசம்” என முன்று விருப்பத்தேர்வுகளைக் கொடுத்து கருத்துக்கணிப்பு நடத்தியது.

விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இதற்குப் பல்வேறு தரப்பினர் வாக்களித்திருக்கின்றனர். இதன் முடிவில், சரியாகவே கையாளுகிறது என 13 சதவிகித மக்களும், ஓரளவுக்கு ஓகே என்பதை 8 சதவிகித மக்களும், மிக மோசம் என 79 சதவிகித மக்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

from Tamilnadu News https://ift.tt/SqT1NGV