தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தக்காளி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு, மிக அதிகபட்சமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.140-ஆக இருந்தது. அதன் பின்னர் மாநில அரசு நடவடிக்கை எடுத்து பசுமை பண்ணை கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளியை விற்பனை செய்ய தொடங்கியது. அதன் காரணமாக ரூ.90 வரையிலும் தக்காளி விலை குறைந்தது.

தற்போது மீண்டும் பல மாநிலங்களில் கனமழை தொடங்கியுள்ள நிலையில், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்திருப்பதால், மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டாம் ரகத் தக்காளி 130 ரூபாய்க்கும், மூன்றாவது ரக தக்காளி 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் இதர பகுதிகளிலும் 100 ரூபாயைத் தாண்டியே மொத்த விலையில் தக்காளி விற்கப்படுகிறது. சந்தைகளில் இருந்து தக்காளி வாங்கிச் சென்று விற்பனைச் செய்பவர்கள், தங்களது கடைகளில் அதிகபட்சமாக ரூ.170 வரையிலும் விற்று வருகின்றனர்.
இவ்வாறாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தக்காளியின் விலை குறையாமல் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதிக விலைக்கு விற்கப்படும் தக்காளியில், உண்மையில் லாபமடைவது… பயிரிடும் விவசாயிகளா… இடைதரகர்களா… கடைக்காரர்களா என்கிற கேள்வி எழுகிறது. “இந்தியாவில் அத்தியாவசிய தேவைகளின் விலைவாசி அச்சுறுத்தும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது” என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் அருண் நெடுஞ்செழியன்.
இது தொடர்பாக நம்மிடம் பேசியவர், “பணவீக்கம் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுவதுண்டு. பயிர்விளைச்சல் பாதிக்கப்படும்போது அந்தக் குறிப்பிட்ட பயிருக்கான விலை உயரும். அதன் உற்பத்தி அதிகரிக்கும்போது, விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால், சில விலை உயர்வு நிரந்தரமாக மாறிவிடும். உதாரணத்துக்கு சாப்பாட்டை எடுத்துக் கொள்வோம். தற்போதைய சூழலைக் காரணம் காட்டி டீ விலை ரூ.12 என உயர்த்தப்படுகிறது என்றால், நிலவரம் சரியானதும் யாரும் அந்த விலையைக் குறைப்பதில்லை.

ஒருவேளை தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, தக்காளி விலையும் அப்படி ஒரு சூழலுக்கு வந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
இந்தியாவில் விலைவாசி உயர்வு என்பது வருவாய் ஏற்றத்தாழ்வுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தியாவில் பொருளாதாரரீதியாக மேல் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த வருவாயில் 57 சதவீதம் செல்கிறது என்றும், பொருளாதாரரீதியாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் நாட்டின் மொத்த வருவாயில் 13 சதவீதம் மட்டுமே செல்கிறது என்றும் ‘உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022’ குறிப்பிடுகிறது.

இவ்வாறாக விலைவாசி உயர்வு குறித்து நாம் புரிந்து கொள்ளும் அதேநேரத்தில், இப்போது தக்காளி விலை உயர்வால் லாபம் அடைவது யார் என்கிற கேள்விக்கான பதிலை கணக்கிடுவதும் சிக்கல்தான். ஏனென்றால் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொன்றாக இருக்கிறது. ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது இன்றைய சூழலில், தக்காளி போட்டவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். ஏனென்றால் சில இடங்களில் நேரடியாக கொள்முதல் செய்துள்ளனர். சில இடங்களில் தரகர்கள் மூலம் செய்துள்ளனர். ஆனால், மற்ற விவசாயிகள் என்ன ஆனார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.
இப்போது விலையேற்றத்துக்கு காரணமாகச் சொல்லப்படுவது பற்றாக்குறை, தக்காளி உற்பத்தியின் வீழ்ச்சி. அப்படி இருக்க தக்காளி உற்பத்தி சமநிலை தன்மை குறைந்தது எதனால் என்றும் பார்க்க வேண்டும். அத்தியவசிய பொருளான தக்காளி குறித்து தரவுகள் இல்லாததும் இதன் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. எனவே தக்காளி வீழ்ச்சியை கண்காணிக்க தவறிய வேளாண்துறையும், மத்திய, மாநில அரசுகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒரு பக்கம் தக்காளி விவசாயிகளுக்கு லாபமாக இருந்தாலும், அதன் சுமை மக்கள்மீது விழுந்திருப்பதையும் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்” என்றார்.
“இந்த நேரங்களில் கொள்ளை லாபம் சம்பாதிப்பது இடைத்தரகர்கள்தான்” என்று அடித்துச் சொல்கிறார் தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். மேலும் தொடர்ந்தவர், “இந்த விலை உயர்வில், விவசாயிகளுக்கு விற்பனையாவதில் பாதி அளவில்கூட கிடைப்பதில்லை. எனவே அரசாங்கம் சந்தை திட்டமிடலுடன், உற்பத்திக்கு தேவையான காய்கறிகளை கணக்கிட்டு, தட்டுப்பாடு ஏற்படும்போது உற்பத்தி மிகையாக இருக்கும் இடங்களில் இருந்து இறக்குமதி செய்வதற்கான கண்காணிப்பு மையங்களையும் ஏற்படுத்த வேண்டும். உற்பத்தி பொருள்களை இருப்பு வைப்பதற்கான குளிர்சாதன கிடங்கு வசதிகளை தேவைக்கு ஏற்ப கொண்டுவர வேண்டும்.

உற்பத்தி மிகையாக இருக்கும்போது வெளிமாநிலங்களிலிருந்து பெறுவதை கட்டுப்படுத்த வேண்டும். குறைத்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயம் செய்து அந்த விலைக்கு குறைவில்லாமல் கொள்முதல் செய்வதையும், ஒரு கட்டுப்பாடுடன் விற்பனைக்கான விலையையும் நிர்ணயம் செய்வதை வடிவமைக்க வேண்டும். அரசாங்கம் மேம்போக்கான கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்வதால், உற்பத்தியாளர்கள் பாதிப்பிலேயே இருக்கிறார்கள். இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் விற்று சம்பாதிக்கிறார்கள். எனவே அரசுதான் சந்தை உத்தரவாத்தத்தை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/rB4lpFg
