தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நேற்று முன்தினம் பாதயாத்திரையை தொடங்கினார். மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, மூன்றாவது நாளான இன்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தனது பாதயாத்திரையைத் தொடங்கினார். இந்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில், ஆண்டாண்டு காலமாக கனகசபைமீது ஏறித்தான் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தார்கள். கொரோனா காலகட்டத்தில்தான் அது நிறுத்திவைக்கப்பட்டது.

அண்ணாமலை பாதயாத்திரை

அதைத் தொடந்து, மீண்டும் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை முடிவு எடுக்கலாம் என நீதிமன்றம் கூறியது. அதனடிப்படையில்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அண்ணாமலையில் பாதயாத்திரை, 9 ஆண்டுகளாக பா.ஜ.க செய்த ஆட்சிக்காக மேற்கொள்ளப்படும் பாவயாத்திரை. இந்த யாத்திரையால் தி.மு.க-வை எதுவும் செய்யாது. ராமநாதபுரத்தில், பிரதமர் மோடி அல்ல, எப்பேர்பட்ட ஜாம்பாவான் போட்டியிட்டாலும் தோல்வியடைவது உறுதி.

சேகர் பாபு

ராமநாதபுரத்தில் தி.மு.க-வின் வாக்குகளை அறுவடை செய்ய முடியாது. தி.மு.க-வின் வலுவான தங்கக் கோட்டையாக அந்தப் பகுதி இருக்கிறது. எனவே, தங்கத்தைத் தகரத்தோடு ஒப்பிடாதீர்கள். செய்த பாவத்துக்காக யாத்திரை மேற்கொள்பவர்களையும், தி.மு.க-வையும் ஒப்பிடாதீர்கள்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

from Tamilnadu News https://ift.tt/l3EZb5P