விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பேசுகையில், “தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும். எனவே அதற்கான ஆயத்த வேலைகளை இன்றிலிருந்தே தொடங்கவேண்டும். தேர்தலில் நாம் வெற்றிப்பெற வேண்டும்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, மதுவின் பிடியிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என கிராமம் கிராமமாகச் சென்று, பிரசாரம் செய்யவிருக்கிறோம். தினமும் 15 முதல் 20 கிராமங்கள் வரை பிரசாரம் செய்யவிருக்கிறோம். ‘குடித்தால் மூளை சரியாக வேலை செய்யாது. அன்றாட பணிகள் செய்ய முடியாது. குடும்பம் பாதிக்கப்படும். இளைஞர்கள் மதுவிலிருந்து விடுபட வேண்டும்’ என நடிகர் ரஜினி கூறியதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. நடிகர் ரஜினியை ஒரு தூதுவராக முன்னிறுத்தி, மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்யவிருக்கிறோம். இதற்காக, இன்னும் ஒரு வாரத்தில் நடிகர் ரஜினியைச் சந்திக்கவிருக்கிறேன்.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் நாங்கள் ஏற்கெனவே பலமுறை போட்டியிட்டிருக்கிறோம். தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கான தளம். எனவே, வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும். தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்கள் அந்தத் தொகுதியின் வளர்ச்சிக்காக இதுவரை எந்த தொழிற்சாலையையோ, தொழில் நிறுவனத்தையோ அமைக்கவில்லை. டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டால் கள்ளச்சாராய விற்பனை அதிகரிக்குமோ என்ற பயம் வேண்டாம். புதிதாக யாரும் கள்ளச்சாராயம் காய்ச்சப் போவதில்லை. ஏற்கெனவே பழக்கப்பட்ட அல்லது அனுபவம் உள்ளவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுவார்கள். எனவே, மதுவிலக்கு போலீஸார் தங்கள் பணியை சரியாகச் செய்தாலே தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முழுமையாக தடுத்து நிறுத்திவிடலாம்.

தமிழக அரசின் போக்குவரத்துத்துறையில் 8 கோட்டங்கள் இருக்கின்றன. இதில் மொத்தத்துக்கும் சேர்த்து 24 ஆயிரம் பேருந்துகள் இருக்கின்றன. போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.4 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதன்படி, 2003-ம் ஆண்டுக்கு முன்பாக அமலில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை ஓய்வுத்தொகை கிடைத்துவந்தது. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த பின்பு, அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் யாருக்கும் ஓய்வு நாளான்று ஒரு பைசாகூட கிடைப்பதில்லை. ஓய்வுபெற்று 2 ஆண்டுகளுக்குப் பிறகே அவர்களுக்கான ஓய்வூதிய பண பலன்கள் கிடைக்கின்றன.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சென்று சேரவேண்டிய ஓய்வூதியத்தொகை சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தை போக்குவரத்துத்துறை என்ன செய்கிறது என்பது மர்மமாக உள்ளது. ஓய்வூதியதாரர்களின் பணத்தை, போக்குவரத்துத்துறை தவறான இடங்களில் முதலீடு செய்வதாகத் தெரிகிறது. தொழிலாளர்களின் வைப்புநிதியை தமிழக அரசும், போக்குவரத்துத்துறையும் தவறாகப் பயன்படுத்துகின்றன. இது டாஸ்மாக்கில் நடைபெற்ற ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான ஊழலைவிட பெரிய ஊழலாக இருக்கிறது. ஆகவே போக்குவரத்துத்துறையில் நடக்கும் விஷயங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்துக்குச் சென்று சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வேன். நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு அதிக அளவு மின்சாரம் கிடைக்கிறது. அதன் விரிவாக்கப் பணிகளுக்காக 20,000 ஏக்கர் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டது. அதன் பின்னும் விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்த நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் அறுவடை நேரத்தில் விவசாய நிலத்தை கனரக இயந்திரங்கள் மூலம் தோண்டி எடுத்தது துரதிஷ்டவசமானது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை தோல்வியடைந்த திட்டமாகக் கருதுகிறேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்படும் என்றுதான் தி.மு.க-வினர் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் தற்போது அதில் பல நிபந்தனைகளை புகுத்தியிருக்கின்றனர். இந்தத் திட்டத்துக்கு அரசிடம் போதுமான நிதி இல்லை. ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்பதுபோல, தற்போது நிதி இல்லாமல் கஜானாவைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறதென பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/klWBa4i
