மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று காலை கோவை மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், சமீபகால அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசினார். குறிப்பாக மணிப்பூர் கலவரம் பற்றிப் பேசியபோது, “மலையைவிட்டு பழங்குடி மக்களை அகற்றிவிட்டு, தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்யத்தான் கலவரம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மணிப்பூர் முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை” என்றார்.

தொடர்ந்து, “ஜவுளித்துறையைப் பொறுத்தவரை, வெளிநாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் தயாரிக்கும் ஏற்றுமதி பொருள்களுக்குச் சந்தை இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. இது சார்ந்து எந்த எச்சரிக்கையும், நடவடிக்கையும் மத்திய அரசால் எடுக்கப்படவில்லை. நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சியினர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் நாடாளுமன்றத்துக்கே தலை காட்டாமல் இருக்கிறார்.

இப்படியான பற்றியெரியும் அவலங்கள் நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறபோது, பாதயாத்திரை என்ற பெயரில் பேருந்தில் யாத்திரை செல்கிறார் அண்ணாமலை. அரை கிலோமீட்டர் நடந்துவிட்டு யாத்திரை என்கிறார். இது எந்த வகையில் நாட்டுக்கு உதவும் என்பது தெரியவில்லை. மணிப்பூர், மும்பை, ஹரியானா என நாட்டின் அத்தனை முடுக்கிலும் பிரச்னைகள் நிகழ்வதைப் பார்த்துக்கொண்டு எப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி தமிழக ஆளும் கட்சியை விமர்சனம் செய்யலாம். மதவாத அரசியலையே திரும்பத் திரும்ப முன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்” என விமர்சனம் செய்தார். மும்பை துப்பாக்கிச் சூடு, கலவரம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கொடநாடு வழக்கின் மர்ம முடிச்சுகள் போன்றவற்றைக் குறித்தும் பேசினார். இறுதியாக, `சீமான் போன்ற நபர்களுக்கு தான் பதில் சொல்ல வேண்டியது இல்லை’ என்று அது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

from Tamilnadu News https://ift.tt/t6zqAZ9