நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் கூட்டணியான NDA டெல்லியிலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A பெங்களூரிலும் கூட்டம் நடத்தின. NDA கூட்டணியில் 36 கட்சிகளும், `I.N.D.I.A’ கூட்டணியில் 26 கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், இந்த இரு கூட்டணிகளிலும் இடம்பெறாத கட்சிகளின் நிலைப்பாடு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த இரு கூட்டணியிலும் சேராமல் இருந்த ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பா.ஜ.க-வுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அதேபோல, ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளமும் பா.ஜ.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பி.ஆர்.எஸ் கட்சி `I.N.D.I.A’ அல்லது ‘NDA’ இரண்டு கூட்டணியிலும் இல்லை. அதே நேரம், நாங்கள் தனியாகவும் இல்லை. எங்களுடன் எங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த `I.N.D.I.A’ கூட்டணி 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்திருக்கிறது. ஆனால், நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
எனவே, நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும். மகாராஷ்டிராவில் தேர்தல் ஏற்பாடுகளுக்காக பல்வேறு நிலைகளில் அமைப்புக் குழுக்களை உருவாக்கி வருகிறோம். இதற்காக 14.1 லட்சம் தொண்டர்கள் கொண்ட ஒரு படைப்பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்டவர்களின் தொடர் போராட்டம் கவலையளிக்கிறது. அந்தச் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற மராத்தி கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான அன்னபாவ் சாத்தேவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/L4Dq0Wi
