மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம், எதிர்க்கட்சிகள், பெண்கள் ஆணையம், மனித உரிமை அமைப்புகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், உலக நாடுகள் என அடி மேல் அடி கொடுத்துவருகிறார்கள். ஆனாலும், மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எதற்கும் அசைவதாக இல்லை.

மணிப்பூர் வன்முறை மூன்று மாதங்களாக நீடித்துவருகிறது. தற்போது சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அங்கு வன்முறைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், ‘முதல்வர் பிரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். குக்கி, மைதேயி ஆகிய இரு இனங்களுமே மாநில அரசின்மீது நம்பிக்கை இழந்துவிட்டதால், நடுநிலையான ஒரு நபரால் மாநில நிர்வாகம் செயல்படுத்தப்பட வேண்டும்’ என்று டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி மாலிவால் கூறியிருக்கிறார்.
மணிப்பூருக்கு கடந்த ஜூலை 23-ம் தேதி சென்ற ஸ்வாதி மாலிவால், கடந்த மே 4-ம் தேதி வன்முறை கும்பலால் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பழங்குடிப் பெண்களைச் சந்தித்தார்.
மணிப்பூருக்குச் சென்று, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கு ஸ்வாதி மாலிவாலுக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. அதன் பிறகு ட்வீட் ஒன்றை ஸ்வாதி மாலிவால் வெளியிட்டார். அதில், “நான் மணிப்பூருக்கு வரும்போது, தங்களைச் சந்திக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை நான் சந்திக்கச் செல்லும்போது, நீங்களும் வர வேண்டும்” என்று முதல்வர் பிரேன் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தின் விவரங்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிறகு, திட்டமிட்டபடி ஜூலை 23-ம் தேதி மணிப்பூருக்குச் சென்ற ஸ்வாதி மாலிவால், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்தார். அதன் பிறகு, பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார். மணிப்பூர் வன்முறைக்கான மூல காரணத்தை ஆராய்வதற்கு பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்பது அவரது முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று. கடந்த சில மாதங்களில் மணிப்பூரில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தமான எஃப்.ஐ.ஆர்-களின் நகல்களை டெல்லி பெண்கள் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பதும் அவரது முக்கியமான கோரிக்கைகள்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஸ்வாதி மாலிவால் அனுப்பிய இடைக்கால பரிந்துரைகளில், ‘உடனடியாக அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூருக்கு உடனடியாகச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

வன்முறை
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்களை நேரில் சந்தித்தப் பிறகு, அந்தப் பெண்களின் வலியை நேரில் உணர்ந்த பிறகு, இப்படியான கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறார் ஸ்வாதி மாலிவால்.
டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவரான ஸ்வாமி மாலிவால் மணிப்பூருக்குச் சென்றுவந்த பிறகு, தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவரான ரேகா சர்மா ஜூலை 25-ம் தேதி மணிப்பூருக்குச் சென்றார். மணிப்பூர் அரசின் தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷி, டி.ஜி.பி ராஜீவ் சிங் உள்ளிட்ட அதிகாரிகளை அவர் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்திருக்கிறார்.

இரண்டு பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பான வீடியோ ஜூலை 20-ம் தேதி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான்கு நாள்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளருக்கும் டி.ஜி.பி-க்கும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், டெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் மணிப்பூருக்குச் சென்ற பிறகுதான், இவர் அங்கு சென்றார். என்ன மாதிரியான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பெண்கள் ஆணையம் வைக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
from Tamilnadu News https://ift.tt/ZqJKOMl
